திண்டுக்கல் மாநகராட்சியில்: சொத்துவரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்துவரி உயர்வை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி உயர்வை கண்டித்தும், ரத்து செய்யக்கோரியும் மாநகராட்சி அலுவலகம் அருகில், தி.மு.க., காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ. செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜப்பா வரவேற்றார்.
அப்போது இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசுகையில், திண்டுக்கல்லில் சொத்துவரி மற்றும் குடிநீர் வரி உயர்வு மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. எனவே, வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகே கட்டப்பட்டுள்ள பாலத்தை ஒரு வாரத்துக்குள் திறக்க வேண்டும். அவ்வாறு திறக்கவில்லை எனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால், நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆனால், 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த ஆர்வமாக உள்ளனர், என்றார்.
இதில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணி, மத்தியக் குழு உறுப்பினர் சந்தானம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராகவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அன்பரசு உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதைத் தொடர்ந்து வரி உயர்வு ரத்து, சாலைகள் சீரமைத்தல், சீரான குடிநீர் வினியோகம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் மாநகராட்சி கமிஷனர் மனோகரிடம் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story