மதுரை வாலிபர்கள் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
மதுரை வாலிபர்கள் உள்பட 3 பேர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்,
மதுரை ஆரப்பாளையம் மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் கார்த்திக் என்ற ஆப்பிள் கார்த்திக் (வயது 22). இதேபோல் ஆரப்பாளையம் மஞ்சள்மேட்டை சேர்ந்த புலிக்குட்டி (22). இந்த 2 பேர் மீதும், திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி, கொடைரோடு பஸ்நிலையத்தில், மாவுத்தன்பட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி கார்த்திக் மற்றும் புலிக்குட்டி ஆகியோர் வழிப்பறி செய்தனர். இதுதொடர்பாக அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
இதேபோல் ஆத்தூர் தாலுகா நெல்லூர் அருகே உள்ள திருநகரை சேர்ந்தவர் கணேசன் (42). இவர் தேனி மாவட்டம் போடிமெட்டு பகுதியில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி, பெரியகுளம் மற்றும் கொடைக்கானல், வத்தலக்குண்டு ஆகிய ஊர்களில் விற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி பட்டிவீரன்பட்டிக்கு 21 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த போது, கணேசன் போலீசில் சிக்கினார். இதையடுத்து அவரை, பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
இந்த 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், திண்டுக்கல் கலெக்டர் டி.ஜி. வினய்க்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேரையும் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story