கார் மெக்கானிக் கடத்தல் வழக்கில்: போலி சாமியார் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை - 3 சிலைகள் மீட்பு


கார் மெக்கானிக் கடத்தல் வழக்கில்: போலி சாமியார் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை - 3 சிலைகள் மீட்பு
x
தினத்தந்தி 30 Oct 2018 3:00 AM IST (Updated: 30 Oct 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

கார் மெக்கானிக் கடத்தல் வழக்கில் போலி சாமியார் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 3 சிலைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள நல்லப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மகன் ஸ்ரீதர் (வயது 23). கார் மெக்கானிக். கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது தொடர்பாக அவரது தந்தை ராஜாமணி மத்தூர் போலீசில் தனது மகன் கடத்தப்பட்டதாக புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் ஸ்ரீதரின் வீட்டிற்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர், ரூ.10 லட்சம் கேட்டதாகவும், அதை போலீசில் தெரிவிக்க கூடாது என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் மாலை ஸ்ரீதர் கடத்தல் காரர்களிடம் தப்பி மத்தூர் போலீஸ் நிலையம் வந்தார்.

அவரிடம் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டி, மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அதில் ஸ்ரீதரை, போலி சாமியார் பெரியசாமி உள்பட 4 பேர் சேர்ந்து கடத்தியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:-

போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் பெரியசாமி. போலி சாமியார். இவர் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஐம்பொன் சிலைகள் இருப்பதாக கூறி சிலரிடம் பணம் பறித்து விட்டு, அவர்கள் செல்வதற்கு முன்னால் அந்த இடத்திற்கு சென்று போலி சிலைகளை புதைத்து வைத்து இருப்பார்.

இவருக்கும், ஸ்ரீதருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் சிலையை மண்ணுக்குள் புதைத்து வைத்த விவகாரத்தில் ஸ்ரீதர் - பெரியசாமி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக பெரியசாமி மற்றும் சிலர் சேர்ந்து ஸ்ரீதரை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. தற்போது ஸ்ரீதர் தப்பி வந்துள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதே போல ஸ்ரீதரை கடத்தியதாக கூறப்படும் பெரியசாமி உள்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையே 3 சிலைகளை போலீசார் மீட்டுள்ளனர். இதில் பர்கூரைச் சேர்ந்த ஒரு சாமியாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.

இந்த சம்பவம் மத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story