இப்படியும் ஒரு போராட்டம்: மதுக்கடையை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல்


இப்படியும் ஒரு போராட்டம்: மதுக்கடையை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 30 Oct 2018 3:15 AM IST (Updated: 30 Oct 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே மதுக்கடையை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இப்படியும் நடந்த ஒரு போராட்டம் பற்றிய விவரம் வருமாறு:-

சூளகிரி,


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா புக்கசாகரம் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் வரை டாஸ்மாக் கடை இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி அகற்றப்பட்டது. இதனால் புக்கசாகரம், ராமச்சந்திரம் சுற்றி உள்ள கிராமத்தைச் சேர்ந்த மது பிரியர்கள் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காமன்தொட்டி அல்லது பேரண்டப்பள்ளி மதுக்கடைக்கு மதுபானம் வாங்க செல்ல வேண்டி இருந்தது.

அந்த சாலையில் டிப்பர் லாரிகள் அதிகமாக செல்வதால் மது குடித்து விட்டு செல்பவர்கள் விபத்தில் சிக்கி வந்தனர். இதனால் ராமச்சந்திரம் - புக்கசாகரம் இடையே ஒரு மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மதுக்கடையை திறக்கும் முடிவு நிறுத்தப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆண்களும், பெண்களும் மதுக்கடையை திறக்க வலியுறுத்தி நேற்று ராமச்சந்திரம் பஸ் நிறுத்தம் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

புக்கசாகரம் பகுதியில் டாஸ்மாக் கடை இல்லாததால், கர்நாடக மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு மதுபானம் வாங்கி வந்து, சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். மேலும் காமன்தொட்டி அல்லது பேரண்டப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று வரும் ஆண்கள் பலர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே மது அருந்தக்கூடியவர்கள் வாகனங்களை ஓட்டாமல் இருக்க புக்கசாகரம் பகுதியிலேயே ஒரு மதுக்கடை திறக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். அவர்களை அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் மதுக்கடையை திறக்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு கொடுக்க உள்ளதாக, தெரிவித்தனர்.

மதுக்கடையை மூடக்கோரி தான் போராட்டம் நடைபெறும், ஆனால் மதுக்கடையை திறக்கக்கோரி நடந்த சாலைமறியல் பற்றி சிலர் கூறும்போது, இப்படியும் ஒரு போராட்டம் நடைபெற்றதே, என்றனர்.

Next Story