தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல் : 324 பேர் கைது


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல் : 324 பேர் கைது
x
தினத்தந்தி 30 Oct 2018 3:00 AM IST (Updated: 30 Oct 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 324 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முதல் சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான சத்துணவு ஊழியர்கள் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் தேவேந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளி நாதன், மாவட்ட செயலாளர் சேகர், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

இந்த போராட்டத்தில், சிறப்பு காலமுறை ஊதியம் என்ற அடிப்படையில் மிகக் குறைந்த ஊதியத்தை பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து கொள்ள ஏதுவாக நியாயமான ஓய்வூதியத்தை நிர்ணயித்து வழங்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு தெரிவித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் பல்வேறு அரசு ஊழியர் சங்க கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

போராட்ட குழுவினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்மபுரி-சேலம் சாலையில் ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்தனர். இதனால் சாலையில் அமர்ந்த சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. இதையடுத்து போலீசார், சாலைமறியலில் ஈடுபட்ட 300 பெண்கள் உள்பட 324 சத்துணவு ஊழியர்களை கைது செய்தனர். சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் பள்ளிகளில் சத்துணவு சமைக்கும் பணி மாற்று பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

Next Story