கோத்தகிரியில் பயங்கரம்: கழுத்தை அறுத்து இளம்பெண் படுகொலை - மகனையும் கொல்ல முயன்ற மர்ம ஆசாமிகள்


கோத்தகிரியில் பயங்கரம்: கழுத்தை அறுத்து இளம்பெண் படுகொலை - மகனையும் கொல்ல முயன்ற மர்ம ஆசாமிகள்
x
தினத்தந்தி 30 Oct 2018 3:00 AM IST (Updated: 30 Oct 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் கழுத்தை அறுத்து இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். அவரது மகனின் கழுத்தையும் அறுத்து மர்ம ஆசாமிகள் கொல்ல முயன்றனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி கடைவீதி அருகில் உள்ள ரோஸ் காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(வயது 32). சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி லோகேஸ்வரி(25). இவர்களுக்கு கார்த்திகேயன்(4) என்ற மகன் உள்ளான். இவன் கோத்தகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான். கணவர் ராஜேஷ்குமார் வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றுவிட்டதால், லோகேஸ்வரி தனது மகனுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் கட்டபெட்டு அம்பேத்கர் நகரில் வசித்து வரும் லோகேஸ்வரியின் தாயார் வசந்தா நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மகளின் வீட்டிற்கு வந்தார்.

அப்போது முன்பக்க கதவு பூட்டி இருந்தது. உடனே வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது, அங்குள்ள கதவு உள்புறமாக பூட்டியிருந்தது. ஆனால் கதவின் இடுக்கில் ரத்தம் வழிந்திருந்தது.
இதை கண்டு சந்தேகம் அடைந்த வசந்தா கோத்தகிரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு லோகேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது மகன் கார்த்திகேயனின் கழுத்தும் அறுக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தான். உடனே போலீசார் அவனை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கார்த்திகேயன் கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீஸ் மோப்ப நாய் மில்டன் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி மற்றும் கத்திரிக்கோல் ஆகியவை கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு லோகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை சம்பவம் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

கொலையான லோகேஸ்வரியின் செல்போனுக்கு வந்த அழைப்புகள் மற்றும் அவரது செல்போனில் இருந்து சென்ற அழைப்புகளை சேகரித்தும், அவரது வீட்டிற்கு அடிக்கடி வருபவர்களின் விவரங்களை சேகரித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்.லோகேஸ்வரியை கொலை செய்த மர்ம ஆசாமிகளை பிடிக்க எனது தலைமையிலான 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பணம் மற்றும் நகைக்காக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சிறுவன் கார்த்திகேயன் குணமடைந்தவுடன், அவனிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும். அப்போது அனைத்து விவரங்களும் தெரியவரும். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story