மஞ்சூரில்: தேயிலை தோட்டங்களில் உலா வரும் காட்டெருமைகள்- தொழிலாளர்கள் பீதி
மஞ்சூரில் தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் உலா வருவதால், தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.
மஞ்சூர்,
மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தேயிலை தோட்டங்கள் அதிகளவில் உள்ளன. இந்த தேயிலை தோட்டங்களை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதிகள் காணப்படுகிறது. இங்கு வாழும் சிறுத்தைப்புலி, கரடி, காட்டுயானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் சமீப காலமாக தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றன. குறிப்பாக சிறுத்தைப்புலிகள் குடியிருப்புகளில் புகுந்து கால்நடைகளை அடித்து கொன்று அட்டகாசம் செய்கின்றன. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருந்தாலும், தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. 20-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக உலா வருவதால், பச்சை தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் மஞ்சூர் அருகே உள்ள ஊட்டி, பெங்கால்மட்டம், ராக்லாண்ட், மைனலை மட்டம், மெரிலேண்ட் உள்ளிட்ட சாலைகளிலும் அவை சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.
இதுகுறித்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-
மஞ்சூர் பகுதியில் காட்டெருமை தாக்கியதில் இதுவரை 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருக்கின்றனர்.
தற்போது தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரியும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுமாறு பலமுறை சம்பந்தப்பட்ட துறையினரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. இதனால் அச்சத்துடன் பணிபுரியும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே காட்டெருமைகள் அச்சுறுத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story