கொங்கம்பாளையம் பகுதியில் செயல்படும் சாய –சலவை பட்டறைகளை மூடவேண்டும், பொதுமக்கள் மனு


கொங்கம்பாளையம் பகுதியில் செயல்படும் சாய –சலவை பட்டறைகளை மூடவேண்டும், பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 30 Oct 2018 4:15 AM IST (Updated: 30 Oct 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

கொங்கம்பாளையம் பகுதியில் செயல்படும் சாய–சலவை பட்டறைகளை மூடவேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

ஈரோடு கொங்கம்பாளையம் இ.எம்.எஸ். நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–

எங்கள் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் இருக்கும் பகுதியில் ஏராளமான சாய–சலவை பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீர் நிலைகளில் வெளியேற்றப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட சாய–சலவை பட்டறைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறி இருந்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் வடிவேல் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–

ஈரோடு மாவட்டத்தில் பேரூராட்சி, ஊராட்சி மற்றும் குக்கிராமங்களில் தற்போது டெங்கு, மற்றும் பல்வேறு வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் குக்கிராமங்களில் நோய் தடுப்பு மற்றும் முன் எச்சரிக்கை குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.

இதனால் மாணவ–மாணவிகள், முதியோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே மாவட்ட சுகாதாரத்துறை மூலம் கிராம அளவில் குழுக்கள் அமைத்து தினமும் கண்காணிக்க வேண்டும். பேரூராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நிலவேம்பு பொடியை இலவசமாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 210 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து, நீரில் மூழ்கி இறந்த 3 பேரின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலைகளையும், 6 பள்ளிக்கூடங்களுக்கு தூய்மை பள்ளி விருதுகள் மற்றும் தலா ரூ.10 ஆயிரத்துக்கான காசோலைகளையும், 40 பள்ளிக்கூடங்களுக்கு தலா ரூ.5 ஆயிரத்துக்கான காசோலைகளையும் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

ஈரோடு அன்னை சத்யாநகர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனது சகோதர, சகோதரிகளுடன் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:–

எனது தாய் புற்றுநோயால் இறந்து விட்டார். எனது தந்தை மாயமாகிவிட்டார். இதனால் என்னுடைய 2 சகோதரர், 3 சகோதரிகளை காப்பாற்ற நான் எனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தற்போது வாரம் ரூ.1,000 சம்பளத்துக்கு வேலைக்கு செல்கிறேன். மேலும் என்னுடைய 2 சகோதரர்கள், 2 சகோதரிகள் அரசு பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள். இதனால் நான் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வருகிறேன்.

இந்த நிலையில் நாங்கள் வசித்து வந்த குடிசை மாற்று வாரிய வீடு பழுதானதால் அதை இடித்துவிட்டு தற்போது புதிய வீடு கட்டி வருகிறார்கள். இந்த வீட்டுக்கு பயனாளி தொகையாக ரூ.80 ஆயிரம் செலுத்த வேண்டும். எனது தாய் உயிருடன் இருந்தபோது ரூ.25 ஆயிரம் கட்டி உள்ளார். தற்போது மீதி தொகையை என்னால் செலுத்த முடியவில்லை. எனவே நாங்கள் அனைவரும் குடியிருக்க ஒரு வீடு ஒதுக்கித்தர வேண்டும். மேலும் ஆதரவு இல்லாத எங்களுக்கு வருவாய்க்கு அரசு உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.


Next Story