பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா
x
தினத்தந்தி 30 Oct 2018 4:30 AM IST (Updated: 30 Oct 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில், ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனியில் உள்ள மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். செயலாளர் மணிமேகலை முன்னிலை வகித்தார்.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ரூ.19 ஆயிரத்து 500 சம்பளம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையாக கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் பணிக்கொடை வழங்க வேண்டும்.

குறுமைய பணியாளர்களுக்கு பணியில் சேர்ந்த நாளின் அடிப்படையில் மேற்பார்வையாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திடீரென மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை கலைந்து போக செய்தனர்.


Next Story