திருப்பூரில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்; பாரத் சேனா அமைப்பினர் மனு


திருப்பூரில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்; பாரத் சேனா அமைப்பினர் மனு
x
தினத்தந்தி 30 Oct 2018 3:27 AM IST (Updated: 30 Oct 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பாரத் சேனா அமைப்பினர் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

பாரத் சேனா அமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:–

திருப்பூர் பெரியார்நகர் பகுதியில் இருந்து முருகம்பாளையம் பகுதிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. ரோடுகளில் குழி அதிகமாகும் போது அதில் அவ்வப்போது மண்ணை கொட்டி நிரப்பி வருகின்றனர். ஆனால் ஒருசில நாட்களிலேயே மீண்டும் அந்த பகுதி குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சில நேரங்களில் விபத்தும் ஏற்பட்டு வருகிறது. உயிர்பலி ஏற்படவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் உடனடியாக பெரியார்நகரில் இருந்து முருகம்பாளையம் பகுதி வரை உடனடியாக ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைவர் அபுதாஹிர் தலைமையில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் கடந்த 22–ந்தேதி 700–க்கும் மேற்பட்ட அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் என்ற பெயரில் ஒரு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் அறிவியலுக்கும், நம் கல்விக்கொள்கைக்கும் முற்றிலும் முரண் இருப்பதாகவும், இதனால் இதிகாச புராணங்களையும், ஒரு மதம் சார்பான கருத்துக்கள் மட்டுமே உண்மை என்பது போன்றும் அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பல்லடம் பஸ்நிலைய ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கத்தினர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் சங்கத்திற்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் பஸ்நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். பலர் தவணை முறையில் ஆட்டோக்களை வாங்கி சிரமத்துடன் ஓட்டி வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருசிலர் சாதி அமைப்பின் பெயரில் அந்த இடத்தில் தங்களுக்கும் ஆட்டோ நிறுத்துவதற்கு இடம் வேண்டும் என்று, பிரச்சினையை உருவாக்கும் நோக்கத்தில் எங்களுடன் தகராறில் இடுபட்டு வருகின்றனர். சில சமயங்களில் மிரட்டலும் விடுக்கின்றனர்.

இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சாதி அமைப்பை சேர்ந்த அந்த நபர்களுக்கு அங்கு இடம் கொடுக்காமல் நூற்றுக்கணக்கான குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story