ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: போலீஸ் காவலில் விசாரணை முடிந்து 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு


ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: போலீஸ் காவலில் விசாரணை முடிந்து 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 30 Oct 2018 3:45 AM IST (Updated: 30 Oct 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் போலீஸ் காவலில் விசாரணை முடிந்து 4 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி, 

திருச்சி உறையூர் பணிக்கன்தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் துரைராஜ்(வயது 45). இவரை கடந்த 18-ந் தேதி சிலர் கடத்தி சென்று படுகொலை செய்தனர். துரைராஜ் உடலை மூட்டையாக கட்டி ஆட்டோவில் வைத்து இருந்தனர். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி இந்த கொலை வழக்கு தொடர்பாக உறையூரை சேர்ந்த அப்புசரவணன்(37), சதீஷ், ஸ்ரீரங்கம் தாலுகாவை சேர்ந்த தனபால்(33), திருவெறும்பூரை சேர்ந்த சுரேஷ்(34) ஆகிய 4 பேர் அரியலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் 4 பேரையும் உறையூர் போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் துரைராஜுக்கும், அப்புசரவணனுக்கும் பணம், கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. இதற்கிடையே அப்புசரவணனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை தெரிந்து கொண்ட துரைராஜ் அதனை வெளியே சொல்லிவிடுவேன் என்று கூறி மிரட்டி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்புசரவணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து துரைராஜை கொலை செய்துள்ளார்.

பின்னர் தார்ப்பாயை எடுத்து வந்து துரைராஜின் உடலை மூட்டையாக கட்டி ஆட்டோவில் வைத்துவிட்டு சென்றுள்ளனர், என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து கத்தி, 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை விசாரணைக்காக 4 நாட்கள் காவலில் எடுத்து இருந்த போலீசார், விசாரணை முடிந்துவிட்டதால் 3-வது நாளான நேற்று மாலையே அவர்களை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story