மங்கலம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து சிறுவன் சாவு


மங்கலம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து சிறுவன் சாவு
x
தினத்தந்தி 29 Oct 2018 10:45 PM GMT (Updated: 29 Oct 2018 10:03 PM GMT)

மங்கலம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுவன் இறந்தான்.

மங்கலம்,

மங்கலத்தை அடுத்த அக்ரஹாரப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). இவர் சொந்தமாக விசைத்தறிக்கூடம் வைத்துள்ளார். இவருடைய மனைவி சங்கீதா (33). இவர்களுடைய மகள் லோகிஷா (7), மகன் ரேவந்த் (3). லோகிஷா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துக்குமார் விசைத்தறி கூடத்திற்கு சென்று விட்டார். சங்கீதா வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் பந்து வீசி ரேவந்த் விளையாடிக்கொண்டிருந்தான்.

பின்னர் சிறுவன் விளையாடிய பந்து வீட்டின் முற்றத்தில் விழுந்தது. இதையடுத்து வீட்டிற்கு வெளியே சென்று சிறுவன் விளையாடினான்.

சிறிது நேரத்திற்கு பிறகு சிறுவனின் சத்தம் கேட்கவில்லையே என்று வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த சங்கீதா சிறுவனை தேடியுள்ளார்.

அப்போது வீட்டின் முற்றத்தில் உள்ள சிமெண்ட் தொட்டிக்குள் சிறுவனும், அவன் விளையாடிய பந்தும் கிடந்தது. 2½ அடி உயரம் கொண்ட அந்த சிமெண்ட் தண்ணீர் தொட்டியில் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்துள்ளது. தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பந்தை சிறுவன் எடுக்க முயன்றபோது அதற்குள் தலைகுப்புற தவறி விழுந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சங்கீதா கூச்சலிட்டார். உடனே தண்ணீர் தொட்டிக்குள் இருந்து சிறுவனை வெளியே தூக்கினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் துணையுடன் சாமளாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிறுவனை கொண்டு சென்றனர்.

அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரேவந்த் இறந்தான். தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story