திருச்சுழி அருகே மண் குவாரியை மூடக்கோரி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ஆற்று மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்தும் மண் குவாரியை உடனடியாக மூடக்கோரியும் 50–க்கும் மேற்பட்டோர் திருச்சுழி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
திருச்சுழி,
திருச்சுழி குண்டாற்றை ஒட்டிய பட்டா இடங்களில் சவுடு மண் என்ற பெயரில் ஆற்று மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்தும் மண் குவாரியை உடனடியாக மூடக்கோரியும் பெண்கள் உட்பட 50–க்கும் மேற்பட்டோர் திருச்சுழி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளை ஒட்டிய குண்டாறு மற்றும் கிருதுமால் நதிகளை ஒட்டிய பட்டா இடங்களில் கடந்த சில ஆண்டுகளாக சவுடு மணல் அள்ளுவதற்கு உரிமம் பெற்று முறைகேடாக ஆற்றுமணல் அள்ளப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சுழி அருகே சென்னிலைக்குடி கிராமத்தில் சவுடுமன் அள்ளுவதற்கு உரிமம் பெற்று தற்போது அதற்கு மாறாக திருச்சுழி ரயில்வே மேம்பாலம் அருகே குண்டாற்றை ஒட்டிய பட்டா நிலங்களில் சட்ட விரோதமாக பல அடி ஆழம் வரை இரவு பகலாக ஆற்று மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாக கூறி மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மணல் குவாரியை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரி திருச்சுழி மற்றும் கார்தியப்பன் நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 50–க்கும் மேற்பட்டோர் திருச்சுழி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மணல் குவாரியை தொடர்ந்து நடத்த தடை விதிக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். மணல் குவாரியை நடத்த அதிகாரிகள் தடை விதிக்காத பட்சத்தில் மக்களை ஓன்று திரட்டி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.