விவசாய நிலத்தை சுரங்க மண் மூழ்கடித்த விவகாரம்: வாய்க்கால் வெட்டும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் - விருத்தாசலம் அருகே பரபரப்பு


விவசாய நிலத்தை சுரங்க மண் மூழ்கடித்த விவகாரம்: வாய்க்கால் வெட்டும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் - விருத்தாசலம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 30 Oct 2018 3:15 AM IST (Updated: 30 Oct 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே விவசாய நிலத்தை சுரங்க மண் மூழ்கடித்த விவகாரத்தில், என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கிய வாய்க்கால் வெட்டும் பணியை விவசாயிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கம்மாபுரம்,

விருத்தாசலம் அருகே கொம்பாடிக்குப்பம், பொன்னாலகரம், ஊ.மங்கலம் கொளப்பாக்கம், அரசகுழி, ஊத்தாங்கால், கோபாலபுரம், சு.கீணனூர், கம்மாபுரம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களையொட்டி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 2-வது சுரங்கம் உள்ளது.

சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியின்போது வெளியேற்றப்படும் மண், மேற்கண்ட கிராமங்களையொட்டி பெரிய மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மண் குவியல் அருகே ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுரங்க மண்ணால் விவசாயமே பாழாகி விட்டதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர். ஏனெனில் குவித்து வைக்கப்படும் சுரங்க மண் ஒவ்வொரு மழையின் போதும் நீரில் கரைந்து, அதன் அருகே உள்ள விளைநிலத்தில் படிந்து விடு கிறது. இதை பார்க்கும் போது விளைநிலமே தெரியாத அளவிற்கு சுரங்க மண் பரவி இருப்பதோடு, விவசாய நிலத்தின் மண்ணின் தன்மையை கெடுத்து விடுகிறது.

எனவே சுரங்க மண், விவசாய நிலத்தில் படிவதை தடுக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை அப்படியே கிடப்பில் கிடக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையில் கொம்பாடிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலத்தில் சுரங்க மண் படிந்து விவசாயம் செய்ய முடியாத நிலை உருவானது. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து நிவாரணம் கேட்டும், இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே வரும் காலங்களில் சுரங்க மண், விவசாய நிலத்தில் படிந்து மூழ்கடிப்பதை தடுக்க என்.எல்.சி. நிர்வாகம் முடிவு செய்தது. அதாவது சுரங்க மண் குவியல் முன்பு பெரிய அளவில் வாய்க்கால் தோண்டி, அதன் வழியாக சுரங்க நீரை வெளியேற்றவும், அந்த வாய்க்காலை தாண்டி விளைநிலத்தில் சுரங்க மண் படியாதவாறும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்பேரில் நேற்று என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கியது. இதை அறிந்த அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு, அந்த பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த ஊ. மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் அவர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு தர வேண்டும். 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும், சுரங்க மண்ணால் பழுதடைந்த ஆழ்துளை கிணற்றையும், மின்மோட்டாரையும் சரி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை விவசாயிகள் முன் வைத்தனர். இதை கேட்ட போலீசார் இந்த கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்ற விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story