ராமேசுவரம்,பாம்பன் பகுதியில் சீலா மீன் சீசன் தொடக்கம் விலை குறைவால் மீனவர்கள் ஏமாற்றம்


ராமேசுவரம்,பாம்பன் பகுதியில் சீலா மீன் சீசன் தொடக்கம் விலை குறைவால் மீனவர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 29 Oct 2018 10:34 PM GMT (Updated: 29 Oct 2018 10:35 PM GMT)

ராமேசுவரம்,பாம்பன் பகுதியில் சீலா மீன் சீசன் தொடங்கி உள்ளது. விலை குறைவால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது.மாவட்டத்திலேயே அதிகமான மீன் பிடி படகுகள் கொண்ட ஊர் ராமேசுவரம். அதுபோல் ராமேசுவரம்,பாம்பன் பகுதியில் இருந்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க சென்று வரும் மீனவர்கள் களவாய்,கிளி,மாவுலா,பாறை,முரல்,கணவாய்,நண்டு,இறால் உள்ளிட்ட பல வகை மீன்களை பிடித்து வருவார்கள். மீன்களிலேயே அதிக ருசி கொண்டது சீலா மீன். மற்ற மீன்களை விட முள்ளே இல்லாமல் சாப்பிட அதிக சுவையாகவும்,மிருதுவாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ராமேசுவரம்,பாம்பன் கடல் பகுதியில் சீலா மீன் சீசன் தொடங்கி உள்ளது. பாம்பன் தெற்குவாடி கடற் கரையில் இருந்து 50–க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் தென் கடலான மன்னார் வளைகு£ கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று விட்டு நேற்று காலை மீனவர்கள் கரை திரும்பினார்கள்.இதில் ஒவ்வொரு படகிலும் பல வகை மீன்களுடன் சீலா மீன் 10 கிலோ முதல் 20 கிலோ வரை பிடிபட்டு இருந்தது.

இது பற்றி மீனவர்கள் கூறியதாவது:–

 சீலா மீன் சீசன் தொடங்கி உள்ளது. பிப்ரவரி மாதம் வரை சீலா மீன் சீசன் இருக்கும். சீலா மீன் விலையானது வழக்கத்தை விட அதிகமாக குறைந்துள்ளது.ரூ.400–ல் இருந்து 650 வரை விலை போன சீலா மீனானது தற்போது ரூ.280 முதல் ரூ.300–க்கு விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சபரிமலைகோவிலுக்கு மாலைஅணியும் சீசன் முடிந்த பின்பு தான் சீலா மீனின் விலையும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story