தமிழ்நாடு முதன்மை வன பாதுகாவலர் ஐகோர்ட்டில் தகவல்; வனத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் டிசம்பர் மாதத்துக்குள் நிரப்பப்படும்
வனத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் டிசம்பர் மாதத்திற்குள் நிரப்பப்படும் என தமிழ்நாடு முதன்மை வன பாதுகாவலர் ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்தார்.
மதுரை,
தமிழக வனப்பகுதியில் வணிக நோக்கத்தில் வளர்க்கப்படும் சீகை, யூகாலிப்டஸ் உள்ளிட்ட வெளிநாட்டு மரங்களை அகற்றவும், சோலை மரக்காடுகள் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் உத்தரவிடக்கோரி சோலைமலை, யோகநாதன், சரவணன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகரின் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில் ‘வனத்துறையினருடன் இணைந்து பணியாற்ற தற்காலிகமாக 908 வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தற்போது ரூ.10 ஆயிரம் மாதச்சம்பளம் வழங்கப்படுகிறது. இதை ரூ.15 ஆயிரமாக உயர்த்த அரசுக்கு பரிந்துரைக்குப்பட்டு உள்ளது. 10 ஆண்டு பணி அனுபவத்துக்கு பிறகு அவர்கள் வனத்துறையில் உள்ள நிரந்தர பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவர்.
தமிழகத்தில் அடர்ந்த வனம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சீகை, யூகாலிப்டஸ் உள்ளிட்ட வெளிநாட்டு மரங்களை அகற்றுவதற்காக தமிழ்நாடு உயிர்பன்மை மற்றும் பசுமை திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிதியை பயன்படுத்தி அடர்ந்த வனம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளிநாட்டு மரங்களை அகற்றும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது. வெளிநாட்டு மரங்கள் அகற்றப்படும் பகுதிகளில் பயன்தரும் மரங்கள் நடும் பணியும் நடைபெற்று வருகிறது.
கொடைக்கானல் வனப்பகுதியில் 17 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் வெளிநாட்டு மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்கள் வளர்ந்து பல ஆண்டுகள் ஆகியிருப்பதால் இவற்றை அகற்றுவதில் சிரமம் உள்ளது. கொடைக்கானலில் 8 ஆயிரம் எக்டேரில் ஆண்டுக்கு 530 எக்டேர் வீதம் வெளிநாட்டு மரங்கள் அகற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. வெளிநாட்டு மரங்களை அகற்றும் பணியில் வனத்துறை ஊழியர்களே ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிக்கு தனியார், தொண்டு நிறுவனங்களின் உதவி தேவையில்லை.
இருப்பினும் வனத்துறைக்கு தொண்டு நிறுவனங்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். பசுமை காடுகள் மூலம் நீரை சேமிக்கவும், மண் சரிவு, நிலச்சரிவில் இருந்து பாதுகாக்கவும் முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு முதன்மை வன பாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு வனத்தோட்ட கழகத் தலைவர் உபாத்யாயா, “தமிழகத்தில் 20 ஆயிரம் ஹெக்டேரில் சீகை, யூக்காலிப்டஸ் உள்ளிட்ட மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் திருச்சி, அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதிகளவில் உள்ளன. இந்த மரங்களை ஆண்டுக்கு 3 ஆயிரம் ஹெக்டேர் அளவில் அகற்றலாம். இந்த மரங்களை ஆட்களை வைத்துதான் அகற்ற வேண்டும். எந்திரங்களை பயன்படுத்தினால் வனம் பாதிக்கப்படும். வெளிநாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பாக தனி குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்படும். வனத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் டிசம்பர் மாதத்துக்குள் நிரப்பப்படும். வனத்துறையினருக்கு உதவ வேட்டை தடுப்பு காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க முடியாது“ என்றார்.
இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.