சேலம் மாநகராட்சி பகுதியில்: போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த விளம்பர பலகைகள் அகற்றம் - ரூ.1 லட்சம் அபராதம் வசூல்


சேலம் மாநகராட்சி பகுதியில்: போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த விளம்பர பலகைகள் அகற்றம் - ரூ.1 லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 30 Oct 2018 3:15 AM IST (Updated: 30 Oct 2018 4:17 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சி பகுதியில் போக்கு வரத்துக்கு இடையூறாக இருந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. மேலும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம், 

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் சேலம் மாநகரில் உள்ள சாலைகளில் போக்கு வரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த அனைத்து விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகளை உடனடியாக அகற்றி அபராதம் விதிக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய 4 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை அகற்றும் பணி நேற்று நடந்தது.

சூரமங்கலம் மண்டலத்தில் ஜங்ஷன் மெயின்ரோடு, உழவர் சந்தை பகுதியிலும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் சாரதா கல்லூரி சாலை, செரி ரோடு பகுதியிலும், அம்மாபேட்டை மண்டலத்தில் அம்மாபேட்டை மெயின் ரோடு, பட்டை கோவில் பகுதி, பழைய பஸ் நிலையம் பகுதியிலும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் திருச்சி மெயின் ரோடு மற்றும் லைன்மேடு பகுதியிலும் சாலையோரம் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகள் அகற்றப்பட்டன. மேலும் அனுமதியின்றி வைத்திருந்த சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குகை பாலம் அருகே ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினார்கள். அப்போது கடைக்காரர்கள் சிலர் முறையாக தகவல் தெரிவிக்காமல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக கூறி மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை எடுத்து சென்ற மாநகராட்சி வாகனங்களை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல் திருச்சி மெயின் ரோட்டில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி ஊழியர்கள் செவ்வாய்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி மற்றும் போலீசார் கடைக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாநகராட்சி ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுப்பது சட்டப்படி குற்றம் என எச்சரித்தனர். இதையடுத்து கடைக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story