மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை தாக்கி 15 பவுன் நகை பறிப்பு முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை


மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை தாக்கி 15 பவுன் நகை பறிப்பு முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 30 Oct 2018 4:25 AM IST (Updated: 30 Oct 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை வழிமறித்து தாக்கி 15 பவுன் நகைகளை பறித்துச்சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவில்பட்டி,

இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள பாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 41). இவர் ஆந்திர மாநிலத்தில் கடலை மிட்டாய் தயாரித்து, கடைகளில் மொத்தமாக விற்பனை செய்து வருகிறார். இவருடைய மனைவி வள்ளிமயில் (38).

தர்மராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் தீபாவளி பண்டிகைக்கு தேவையான புதிய துணிகளை வாங்குவதற்காக, நேற்று முன்தினம் மாலையில் தர்மராஜ் தன்னுடைய மனைவி வள்ளிமயிலுடன் கோவில்பட்டியில் உள்ள ஜவுளிக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

பின்னர் அவர்கள் இரவில் கோவில்பட்டியில் இருந்து தங்களது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில் கோவில்பட்டி அருகே சித்திரம்பட்டி காட்டுப்பகுதி வழியாக சென்றபோது, அங்கு இருளில் மறைந்து இருந்த முகமூடி அணிந்திருந்த 3 கொள்ளையர்கள் திடீரென்று அரிவாளை காண்பித்து மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் தர்மராஜ், வள்ளிமயில் ஆகியோர் அணிந்து இருந்த தங்க நகைகளை கழற்றி தருமாறு மிரட்டினர்.

ஆனால் கணவன், மனைவி 2 பேரும் நகைகளை கொடுக்க மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், தம்பதியை தாக்கினர். பின்னர் அரிவாளால் தர்மராஜின் காலில் வெட்டினர். அதன்பிறகு அவர்கள் தர்மராஜின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியையும், வள்ளிமயிலின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி சங்கிலியையும் பறித்துக் கொண்டு, இருளில் ஓடி தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து கணவன்-மனைவி இருவரும் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களிடம் தெரிவித்தனர். உடனே அவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து, தம்பதியை தாக்கி நகையை பறித்துச்சென்ற முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார். இந்த நகை பறிப்பு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story