நிலுவைத் தொகை ரூ.30 கோடியை வழங்க கோரி கரும்புகளை ஏந்தி விவசாயிகள் போராட்டம் தீபாவளியை கருப்பு தினமாக அனுசரிப்போம் என எச்சரிக்கை
நிலுவைத் தொகை ரூ.30 கோடியை வழங்க கோரி கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள், தீபாவளியை கருப்பு தினமாக அனுசரிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தினர் நேற்றுகாலை கரும்புகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது 2 ஆண்டுகள் வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் இவர்கள் அனைவரும் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கடந்த 2015-16 மற்றும் 2016-17-ம் ஆண்டிற்கான மாநிலஅரசு அறிவித்த விலை டன் ஒன்றுக்கு ரூ.450 வீதம் 2 ஆண்டுகளுக்கு ரூ.900 பாக்கி வைத்துள்ளது. ஏறத்தாழ ரூ.30 கோடி நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இந்த தொகையை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த தயாராக இருக்கிறோம். உடனடியாக நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். பின்னர் விவசாயிகள் நிருபர்களிடம் கூறும்போது, தீபாவளி பண்டிகைக்குள் நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்றால் தீபாவளியை கருப்பு தினமாக அனுசரிப்போம். கலெக்டர் அலுவலகத்தில் சாகும்வரை போராட்டம் நடத்துவோம். நிலுவைத் தொகையை வழங்காததால் தீபாவளிக்கு புத்தாடை வாங்க கூட எங்களால் முடியவில்லை. கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு படிக்க அனுப்ப முடியவில்லை. முத்தரப்பு கூட்டத்தை உடனே கூட்டி கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக அறிவிக்க வேண்டும் என்றனர்.
தஞ்சையை அடுத்த முன்னையம்பட்டி உய்யக்கொண்டான் ஏரி பாசன விவசாயிகள் 30-க்கும் மேற்பட்டோர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனு அளித்தனர். அதில், உய்யக்கொண்டான் ஏரி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக துர்வாரப்படாமல் வறண்டு மண் திட்டாக மாறிவிட்டது. இந்த ஏரியை நம்பி 150 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. ஏரியில் தண்ணீர் நிரம்பாததால் 20 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியவில்லை. மழை பெய்தால் மட்டும் ஏதாவது ஒரு பயிர் சாகுபடி செய்து கஷ்டப்பட்டு வருகிறோம். ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாமல் போய்விட்டன.
தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பணிக்காக ஏரியில் மண் எடுக்கப்பட்ட இடம் மட்டுமே பள்ளமாக உள்ளது. அந்த பகுதியில் மட்டும் தான் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. மற்ற பகுதிகளையும் தூர்வாரி கொடுத்தால் விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும். ஏரியில் கரை இல்லாத பகுதியில் கரை அமைத்து ஏரியை சுற்றிலும் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். ஆனால் ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் கரையை அமைக்கவிடாமல் தடுக்கின்றனர். எனவே ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும். மண் எடுத்து கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். ஏரியில் கரை இல்லாத பகுதியில் கரை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story