3-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு
3-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தொடர் போராட்டம் அறிவித்து உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு தலைவர் முருகபெருமாள் சங்க அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு 3-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 2-வது ஊதிய மாற்றத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு, ஓய்வூதிய மாற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடக்கிறது.
அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) தர்ணா போராட்டம் நடக்கிறது. வருகிற 14-ந்தேதி பேரணி நடத்தி பொதுமேலாளரிடம் மனு கொடுக்கப்படுகிறது. 30-11-18-க்குள் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. ஆகையால் பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, பி.எஸ்.என்.எல். ஊழியர், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலகண்ணன், சங்க மாவட்ட செயலாளர்கள் சொர்ணராஜ், ஜெயமுருகன், செல்வசுந்தர் மற்றும் மரிய அந்தோணி பிச்சை ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story