காற்றாலை நிறுவனங்கள் மூலம் அனுமதியின்றி நடப்பட்ட 65 மின்கம்பங்கள் அகற்றம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் காற்றாலை நிறுவனங்கள் மூலம் அனுமதியின்றி நடப்பட்ட 65 மின்கம்பங்கள் அகற்றப்பட்டு உள்ளன என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் காற்றாலை நிறுவனங்கள் மூலம் அனுமதியின்றி நடப்பட்ட 65 மின்கம்பங்கள் அகற்றப்பட்டு உள்ளன என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
இதுகுறித்து அவர் தூத்துக்குடியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மின்கம்பங்கள் அகற்றம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி பகுதிகளில் தனியார் காற்றாலை நிறுவனங்கள் பட்டா நிலம் மற்றும் புறம்போக்கு நிலங்களில் அனுமதியின்றி மின்கம்பங்கள் நடுவதாக புகார்கள் வந்தன. இதனால் சிறப்பு குழு அமைக்கப்பட்டு 50 மின்கம்பங்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து காற்றாலை நிறுவனங்களை அழைத்து பேசப்பட்டது. இதனால் 15 மின்கம்பங்களை காற்றாலை நிறுவனங்களே அகற்றின. போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, காற்றாலை தொடர்பான புகார்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. காற்றாலை நிறுவனத்தினரும் புகார்தாரர்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஓடைகளில் சில இடங்களில் வாகன போக்குவரத்துக்காக மூடப்பட்டு இருந்தன. அதனையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை சுமார் 10 புகார்கள் வந்தன. அனைத்து புகார்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. புறம்போக்கு நிலத்தில் மின்கம்பங்கள் நடப்பட்டு இருப்பது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முறைகேடாக மின்கம்பங்கள் நட்டியவர்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை 2 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.
நோட்டீசு
புதுக்கோட்டை உப்பாற்று ஓடை அருகே ஸ்டெர்லைட் ஆலையின் தாமிரதாது கழிவுகள் தனியார் நிலத்தில் கொட்டி வைக்கப்பட்டு உள்ளன. இதனை தேசிய பசுமை தீர்ப்பாய குழு பார்வையிட்டது. மழை வெள்ளம் செல்லும் பகுதியில் எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்று நோட்டீசு கொடுத்து உள்ளோம்.
மலேசிய மணல் விற்பனை ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ச்சியாக காற்று மாசு குறித்து ஆய்வு செய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு மாசு குறைந்து இருப்பதாக கூறி உள்ளனர்.
சத்துணவு மையங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 சத்துணவு மையங்கள் உள்ளன. இங்குள்ள குழந்தைகள், மாணவ-மாணவிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மகளிர் சுய உதவிக்குழு மூலம் சத்துணவு மையங்கள் செயல்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் குழந்தைகள் அனைவருக்கும் சத்துணவு வழங்கப்படுகிறது. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் முடிவடைந்து செயல்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் மழைமானி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
Related Tags :
Next Story