குற்றாலம் உள்பட 4 இடங்களில் அருங்காட்சியகம் மேம்படுத்தும் பணி அமைச்சர் பாண்டியராஜன் தகவல்


குற்றாலம் உள்பட 4 இடங்களில் அருங்காட்சியகம் மேம்படுத்தும் பணி அமைச்சர் பாண்டியராஜன் தகவல்
x
தினத்தந்தி 30 Oct 2018 3:37 PM IST (Updated: 30 Oct 2018 3:37 PM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் உள்பட 4 இடங்களில் அருங்காட்சியகம் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளன என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

சுரண்டை, 

குற்றாலம் உள்பட 4 இடங்களில் அருங்காட்சியகம் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளன என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

முப்பெரும் விழா

சுரண்டை நாடார் வாலிபர் சங்கம் சார்பில், காமராஜர் பிறந்தநாள் விழா, மருத்துவ முகாம், நாடார் வாலிபர் சங்க ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் பாண்டியராஜன் சுரண்டைக்கு வந்தார். அவருடன் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன் ஆகியோர் வந்தனர். அவருக்கு சுரண்டை நகர அ.தி.மு.க. செயலாளர் சக்திவேல் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து விழா நடக்கும் சிவகுருநாதபுரம் முப்புடாதி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டார். அப்போது நாடார் வாலிபர் சங்கம் சார்பில், கவுரவ தலைவர் கணேசன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்கி நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.

4 இடங்களில் அருங்காட்சியகம்

அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதி உள்பட அனைத்து தொகுதிகளிலும் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. இலங்கையில் ஆட்சி மாற்றம் உருவானது கொல்லைபுறமாக ராஜபக்சே ஆட்சியை பிடித்துள்ளார். ராஜபக்சே அரசால் மக்களுக்கு பாதிப்பு வருவதை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். தமிழக அரசின் வேண்டுகோளை தொடர்ந்து மத்திய அரசின் உதவியோடு இலங்கையில் 1 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

கீழடியில் 3 கட்ட ஆய்வுகளில், 2 ஆய்வுகளில் பல்வேறு பழங்கால பொருட்கள் கிடைத்தன. 3-வது ஆய்வில் எதுவும் கிடைக்கவில்லை. 4-வது கட்ட ஆய்வில் 13 ஆயிரத்து 800 பொருட்கள் கிடைத்தன. இதனை தொடர்ந்து 5-வது கட்ட ஆய்வுக்கு அனுமதி கேட்டுள்ளோம். மதுரையில் நடைபெறும் பழங்கால பன்னாட்டு தமிழர் கண்காட்சியில், கீழடியில் கிடைக்கப்பெற்றுள்ள அரியவகை பொருட்களை இடம்பெற வைக்கப்பட உள்ளது. அதன்பின் தமிழகத்தில் குற்றாலம் உள்பட 4 இடங்களில் அருங்காட்சியகம் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story