கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம்–செல்போன் பறிப்பு 4 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி அருகே தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்–பணத்தை பறித்து சென்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்–பணத்தை பறித்து சென்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
பணம்–செல்போன் பறிப்புபீகார் மாநிலம் சம்சித்பூர் மாவட்டத்தை சேர்ந்த திரேந்திரசஹிரா என்பவரின் மகன் ராஜேஷ்குமார் பஸ்வான் (வயது 26). இவர் தூத்துக்குடியில் தங்கி அங்கு உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் மாலையில் தூத்துக்குடி அருகே உள்ள பெரியநாயகிபுரம் வடக்கு பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றனர்.
4 வாலிபர்கள் கைதுஇதுகுறித்து அவர் உடனடியாக புதுக்கோட்டை போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் அந்த பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த இசக்கிமுத்து (24), மாரிசெல்வம் (19), கொம்பையா (19), மாரிமுத்து (19) என்பதும், அவர்கள் தொழிலாளியிடம் செல்போன் மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், பணம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.