சுகாதார சீர்கேடு 3 தனியார் தொழிற்சாலைகளுக்கு ரூ.2¼ லட்சம் அபராதம்


சுகாதார சீர்கேடு 3 தனியார் தொழிற்சாலைகளுக்கு ரூ.2¼ லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 31 Oct 2018 4:30 AM IST (Updated: 30 Oct 2018 11:09 PM IST)
t-max-icont-min-icon

சுகாதார சீர்கேடு காரணமாக 3 தனியார் தொழிற்சாலைகளுக்கு ரூ.2¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலை முற்றிலுமாக ஒழிக்க மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அவர் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக சுகாதார பணியாளர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் தினந்தோறும் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

நேற்று கலெக்டர் உத்தரவின்பேரில் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன் தலைமையில் சப்-கலெக்டர் ரத்னா, திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் மற்றும் வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் தனியார்தொழிற்சாலைகளுக்கு உள்ளே சென்று அங்குள்ள தண்ணீர் சேகரிக்கும் தொட்டிகள், குடோன்கள் மற்றும் வளாகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது அங்குள்ள 3 தனியார் தொழிற்சாலைகளில் டெங்கு கொசு உற்பத்தி ஆகும் வகையில் சுகாதாரமற்ற வகையில் இருந்தது கண்டறியப்பட்டு மொத்தம் ரூ.2¼ லட்சம் அபராதம் விதித்தனர். பின்னர் அந்த தொழிற்சாலைகளை அங்கு பணிபுரியும் பணியாளர்களை கொண்டு உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்து அவை சுத்தம் செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, விஜயகுமாரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story