சத்துணவு ஊழியர்கள் போராட்டம், பள்ளிகளில் மதிய உணவு வழக்கம்போல் வழங்கப்படுகிறது
சத்துணவு ஊழியர்கள் போராட்டம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத் தாமல் பிசுபிசுத்து போனது. இதனால் பள்ளிகளில் மதிய உணவு தடையில்லாமல் வழக்கம்போல வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை,
காலி பணியிடங்களை நிரப்பவேண்டும், காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்கவேண்டும் உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் பணி பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த சூழ்நிலையிலும் பள்ளி மாணவர்கள் மதிய உணவின்றி தவிக்காத வகையில் சத்துணவு திட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி, சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் எல்லா அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளிலும் மதியம் சத்துணவு வழக்கம்போல வழங்கப்பட்டு வருகிறது. சத்துணவு ஊழியர்களுக்கு பதிலாக அங்கன்வாடி பணியாளர்கள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்தவர்கள் களமிறக்கப்பட்டு எந்தவித சிக்கலின்றி மாணவர்களுக்கு மதிய உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.
சில பள்ளிகளில் சத்துணவு உதவியாளர்களே சமையல் பணியை கச்சிதமாக முடித்து வருகின்றனர்.
இதனால் சத்துணவு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் பிசுபிசுத்து உள்ளது. அதேவேளையில் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்று சத்துணவு ஊழியர்கள் பிடிவாதமாக உள்ளனர். இதற்கிடையே இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வால்டாக்ஸ் சாலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியர்கள் 50 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story