ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக மத்திய அரசு கொடுத்துள்ள உரிமத்தில் மிகப்பெரிய சூழ்ச்சி - டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு


ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக மத்திய அரசு கொடுத்துள்ள உரிமத்தில் மிகப்பெரிய சூழ்ச்சி - டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 31 Oct 2018 3:15 AM IST (Updated: 31 Oct 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக மத்திய அரசு கொடுத்துள்ள உரிமத்தில் மிகப்பெரிய சூழ்ச்சி உள்ளது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

சீர்காழி,


பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நாகை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய பகுதிகளுக்கு வருகை தந்த பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களிடம் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் காவிரி டெல்டா பகுதிகளுக்கு பேராபத்து நெருங்கி கொண்டிருக்கிறது. எப்படியாவது இந்த பகுதியை காப்பாற்ற வேண்டும். கடந்த மாதம் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க இந்தியா முழுவதும் 54 உரிமம் கொடுத்துள்ளது. அதில் 3 உரிமங்கள் காவிரி டெல்டா பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் 2 உரிமங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், மீதி உள்ள ஒரு உரிமம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக டெல்டா பகுதியை நாசப்படுத்தி கொண்டிருக்கும் நிறுவனமாகும். ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக கொடுத்துள்ள உரிமத்தில் மிகப்பெரிய சூழ்ச்சி உள்ளது. நிலத்திற்கு கீழ் இருக்கக்கூடிய எல்லாமே ஹைட்ரோ கார்பன்தான்.

இதில் என்ன பிரச்சனை என்றால் ஹைட்ரோ கார்பன் என்ற திட்டத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கொண்டு வரப்போகிறார்கள். இதனை எடுத்தால் நில அதிர்வு, பூகம்பம், கடல்நீர் உள்வாங்கல், நிலத்தடி நீர் கெடுதல், ரசாயனம் கலந்த குடிநீர், விவசாயம் அழிவு என்று காவிரி டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும். காலம், காலமாக நமக்கு உணவு அளித்து வரும் இந்த பகுதியை காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இதை என் கடமையாக பார்க்கிறேன். முதல் கட்டமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் நமது பாரம்பரியம், நமது அடையாளம் அனைத்தும் பறிபோய் விடும். ஏனென்றால் பல நாடுகளில் அப்படி நடந்திருக்கிறது.

ஆப்பிரிக்கா கண்டத்தில் நைஜீரியா நாட்டில் காவிரி போன்று நைஜை ஆறு உள்ளது. அந்த டெல்டா பகுதியில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால் அந்த பகுதியில் தற்போது மக்களே இல்லை. அனைவரும் அகதிகளாக போய்விட்டனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தால் அந்த பகுதியில் மக்கள் வாழ முடியவில்லை. அதேநிலை காவிரி டெல்டா பகுதிக்கு வரக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். டாக்டர் அன்புமணி ராமதாசுடன் கட்சியின் மாநில நிர்வாகிகள் பழனிசாமி, முருகவேல், செந்தில் முருகன், மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் ஆகியோரும் உடன் சென்றனர். 

Next Story