என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் 10 பேர் சாட்சியம்


என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் 10 பேர் சாட்சியம்
x
தினத்தந்தி 31 Oct 2018 4:30 AM IST (Updated: 31 Oct 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் நேற்று நாமக்கல் கோர்ட்டில் 10 பேர் சாட்சியம் அளித்தனர்.

நாமக்கல்,

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23) கொலை வழக்கு தொடர்பான சாட்சி விசாரணை நாமக்கல் முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன், கோகுல்ராஜின் தோழி சுவாதி, அவரது தாயார் செல்வி உள்பட 26 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்றது. இதையொட்டி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 15 பேரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

நேற்று முதல் சாட்சியாக யுவராஜூக்கு காரை விற்பனை செய்த ரமேஷ்குமார் என்பவர் சாட்சியம் அளித்தார். அவரை தொடர்ந்து ஸ்டிக்கர் கடை உரிமையாளர் ரமேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன், சங்ககிரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாசியந்த், ஸ்டிக்கர் கடை ஊழியர் கவுரிசங்கர், டீக்கடைக்காரர் குமார், செல்போன் கடைக்காரர் தினேஷ்குமார், டெலிபோன் பூத் உரிமையாளர் பாலகிருஷ்ணன், கார் புரோக்கர் செல்வரத்தினம், சீனிவாசன் (30) என 10 பேர் சாட்சியம் அளித்தனர்.

இவர்களில் சீனிவாசன் இறந்துபோன கோகுல்ராஜின் நண்பர் ஆவார். இவரது செல்போனில்தான் கோகுல்ராஜின் சகோதரர் கலைச்செல்வன் மற்றும் தோழி சுவாதி இடையேயான உரையாடல் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நீதிபதி இளவழகன் இந்த வழக்கு விசாரணையை அடுத்தமாதம் (நவம்பர்) 9-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். இவர்களில் ரமேஷ், கவுரிசங்கர், குமார், தினேஷ்குமார், பாலகிருஷ்ணன் ஆகியோரின் சாட்சியம் திருப்திகரமாக இல்லை என அரசு வக்கீல் கருணாநிதி கூறினார்.


Next Story