கோழிகளை கூண்டில் வளர்க்க தடை நீடித்தால் முட்டை விலை ரூ.15 ஆக உயரும் - சம்மேளன துணைத்தலைவர் தகவல்


கோழிகளை கூண்டில் வளர்க்க தடை நீடித்தால் முட்டை விலை ரூ.15 ஆக உயரும் - சம்மேளன துணைத்தலைவர் தகவல்
x
தினத்தந்தி 31 Oct 2018 4:45 AM IST (Updated: 31 Oct 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

கோழிகளை கூண்டில் வளர்க்க தடை நீடித்தால் முட்டை விலை ரூ.15 ஆக உயரும் என சம்மேளன துணைத்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்,

கோழிகளை கூண்டில் அடைத்து வளர்க்க சுப்ரீம் கோர்ட்டு விதித்து உள்ள தடை நீடிக்கும் பட்சத்தில், முட்டையின் விலை ரூ.15 ஆக உயரும் என தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறினார்.

நாமக்கல் மண்டலத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்திற்கு மாற்றாக தொடங்கப்பட்டது கோழிப்பண்ணை தொழில் ஆகும். இந்த தொழிலை தொடங்கியபோது தரையில்தான் கோழிகள் வளர்க்கப்பட்டன.

இதனால் கோழிகளின் எச்சத்தை அகற்றுவது, அவற்றிற்கு தீவனம் மற்றும் தண்ணீர் வழங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. இதேபோல் நோய் தொற்று ஏற்பட்டு, கோழிகள் அதிகஅளவில் இறந்தன. இதனால் பெரும் நஷ்டம் அடைந்த பண்ணையாளர்கள் தரையில் கோழிகளை வளர்ப்பதை தவிர்த்து, கூண்டு முறையில் கோழிகளை வளர்க்க தொடங்கினர்.

அந்த வகையில் தற்போது நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 4 கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தன்னார்வ அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு கோழிகளை கூண்டில் அடைத்து வளர்க்க இடைக்கால தடை விதித்து உள்ளது.

இந்த உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள், அனைத்து மாவட்ட இணை இயக்குனர்களுக்கும் உத்தரவிட்டு உள்ளனர். இதனால் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

கூண்டு முறையில் 50 ஆயிரம் கோழிகளை வளர்க்க 5 பணியாளர்கள் இருந்தால் போதும். ஆனால் தரையில் வளர்க்க 25 பேர் தேவைப்படுவார்கள். ஏற்கனவே கோழிப்பண்ணை தொழிலில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. கூண்டில் அடைத்து கோழி வளர்க்க சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து இருப்பதால் பணியாளர்கள் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும். இதேபோல் இடமும் அதிக அளவில் தேவைப்படும்.

மேலும் கூண்டு முறையில் நாள் ஒன்றுக்கு கோழிக்கு 250 மி.லிட்டர் தண்ணீர் இருந்தால் போதும். ஆனால் தரையில் வளர்த்தால் 2 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். தற்போதே வறட்சி காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக 10 சதவீத பண்ணைகளில் கோழிகள் வளர்க்கப்படுவது இல்லை. இதேபோல் தரையில் வளர்த்தால், நோய் ஏற்பட்டு கோழிகள் அதிகஅளவில் இறக்கும்.

எனவே கோழிகளை கூண்டில் வளர்க்க தடை நீடிக்கும் பட்சத்தில் முட்டைக்கான உற்பத்தி செலவு பல மடங்கு உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ.15 ஆக உயர வாய்ப்பு உள்ளது. எனவே தொழிலில் உள்ள பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, கூண்டில் அடைத்து கோழிகளை வளர்க்க, கோர்ட்டு விதித்து உள்ள தடை உத்தரவை நீக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story