சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல் - 98 பேர் கைது


சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல் - 98 பேர் கைது
x
தினத்தந்தி 30 Oct 2018 11:00 PM GMT (Updated: 30 Oct 2018 10:12 PM GMT)

சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 98 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்களுக்கு முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். உணவூட்டு மானியச்செலவு தொகை ஒரு மாணவருக்கு ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

சத்துணவு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 270 நாட்கள் வழங்க வேண்டும். மாவட்ட அளவில் மாறுதல் கேட்ட அனைவருக்கும், கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் வழங்க வேண்டும், என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ந்தேதி முதல் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இதற்கு சேலம் மாவட்ட தலைவர் தங்க வேலன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சந்திரா, லட்சுமி, சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராஜவேலு கோரிக்கைகள் குறித்து பேசினார். பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 28 ஆண்கள், 70 பெண்கள் என மொத்தம் 98 பேரை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு அனைவரும் கூடினர். பின்னர் அங்கிருந்து கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

இதுகுறித்து சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறும்போது எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் அதற்கான தீர்வு கிடைக்க வில்லை. இதனால் மறியல் போராட்டம் நடத்தி உள்ளோம். தற்போது சென்னையில் அமைச்சர், சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அதில் உடன்பாடு ஏற்பட்டால் போராட்டம் கைவிடப்படும். இல்லை என்றால் எங்களின் போராட்டம் தொடரும், என்று கூறினர்.

Next Story