2–வது நாளாக சாலை மறியல்: சத்துணவு ஊழியர்கள் 1,004 பேர் கைது


2–வது நாளாக சாலை மறியல்: சத்துணவு ஊழியர்கள் 1,004 பேர் கைது
x
தினத்தந்தி 31 Oct 2018 4:30 AM IST (Updated: 31 Oct 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் 2–வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 1,004 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். 1–1–2016 அன்று முதல் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் கடந்த 25–ந் தேதி முதல் 3 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் சத்துணவு ஊழியர்கள் ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 919 பெண்கள் உள்பட மொத்தம் 984 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் மாலையில் விடுதலை செய்தனர்.

இந்த நிலையில் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் இருந்து வந்த சத்துணவு ஊழியர்கள் ஈரோடு சம்பத்நகர் கொங்கு கலையரங்கம் முன்பு திரண்டனர். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் மணிபாரதி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர்பாபு, செயலாளர் வெங்கிடு, பொருளாளர் உஷாராணி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் பேசினார்கள்.

அதன்பின்னர் கொங்கு கலையரங்கத்தில் இருந்து சம்பத்நகர் ரோட்டிற்கு வந்த சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்து வேன், பஸ்களில் ஏற்றினார்கள். இதில் 941 பெண்கள் உள்பட மொத்தம் 1,004 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஈரோடு மல்லிகை அரங்கில் தங்க வைக்கப்பட்டனர்.

சத்துணவு ஊழியர்களின் போராட்டம் காரணமாக அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ–மாணவிகளுக்கு சத்துணவு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதற்காக பள்ளிக்கூடங்களில் உணவு சமைக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சில பள்ளிக்கூடங்களில் சமையல் செய்ய தற்காலிகமாக ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் உணவு தயார் செய்து மாணவ–மாணவிகளுக்கு வழங்கினார்கள். மேலும், அதிகாரிகளும் பள்ளிக்கூடங்களுக்கு நேரில் சென்று மாணவ–மாணவிகளுக்கு பாதிப்பு இல்லாமல் உணவு வழங்க ஏற்பாடு செய்தனர்.


Next Story