பவானி அருகே கார்– லாரி மோதல்: சட்டசபை சபாநாயகரின் உதவியாளர் பலி


பவானி அருகே கார்– லாரி மோதல்: சட்டசபை சபாநாயகரின் உதவியாளர் பலி
x
தினத்தந்தி 31 Oct 2018 5:00 AM IST (Updated: 31 Oct 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

பவானி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சட்டசபை சபாநாயகரின் உதவியாளர் பரிதாபமாக இறந்தார். மேலும் பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

பவானி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி சண்முகம் வீதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் மணிபாரதி (வயது 24). அ.தி.மு.க. பிரமுகர். மேலும் இவர் தமிழக சட்டசபை சபாநாயகர் தனபாலின் நேர்முக உதவியாளராக இருந்து வந்தார். இந்தநிலையில் மணிபாரதி திருப்பதி கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.

அதன்படி நண்பர்களான அவினாசி பகுதியை சேர்ந்த பிரபாகரன், கணேசன், குணா மற்றும் உறவினர்கள் சரஸ்வதி, மைதிலி, லிங்கேஸ்வரன் ஆகியோரை அழைத்துக்கொண்டு மணிபாரதி காரில் திருப்பதிக்கு சென்றார். அவர்கள் அனைவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் அவினாசிக்கு புறப்பட்டனர்.

அப்போது காரை குணா ஓட்டினார். அருகில் மணி பாரதி இருந்தார். மற்றவர்கள் காரின் பின்னால் அமர்ந்திருந்தனர். இந்த கார் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது காரின் முன்னால் லாரி ஒன்று சென்றது.

அந்த லாரியை காரை ஓட்டிச்சென்ற குணா முந்திச்செல்ல முயன்றார். இதில் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்புறப்பகுதியில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மணிபாரதி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story