அரக்கோணம் அருகே: தகராறில் தாக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு - கொலை வழக்காக மாற்றம்


அரக்கோணம் அருகே: தகராறில் தாக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு - கொலை வழக்காக மாற்றம்
x
தினத்தந்தி 30 Oct 2018 9:45 PM GMT (Updated: 30 Oct 2018 10:38 PM GMT)

அரக்கோணம் அருகே தகராறில் தாக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்தனர்.

அரக்கோணம், 

அரக்கோணம் அருகே உள்ள குருவராஜபேட்டை, விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலன் (வயது 27), தொழிலாளி. இவரை, இருளர் காலனி பகுதியை சேர்ந்த குட்டி (45), கோவிந்தன் (25), அய்யப்பன் (20) ஆகிய 3 பேரும் சேர்ந்து கடந்த 27-ந் தேதி கட்டையாலும், கையாலும் தாக்கி உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த பாலன் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, சப்-இன்ஸ்பெக்டர் ரபேல்லூயிஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, குட்டி, கோவிந்தன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

கைதானவர்களிடம் விசாரணை நடத்தியதில், பாலனின் மைத்துனன் மனநிலை பாதிக்கப்பட்ட சரவணன் (15) என்பவர் குட்டிக்கு சொந்தமான தாரை, தப்பட்டையை எடுத்து சென்று உள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த குட்டி, கோவிந்தன், அய்யப்பன் ஆகிய 3 பேரும் சேர்ந்து பாலனை தாக்கியது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் பாலன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து, அய்யப்பனையும் கைது செய்தனர்.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க விஸ்வநாதபுரம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story