எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் தொடரும் நிலையில் சாத்தூர் தொகுதி மேம்பாட்டு பணியில் கூடுதல் கவனம் தேவை; மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்


எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் தொடரும் நிலையில் சாத்தூர் தொகுதி மேம்பாட்டு பணியில் கூடுதல் கவனம் தேவை; மாவட்ட நிர்வாகத்துக்கு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 Oct 2018 4:14 AM IST (Updated: 31 Oct 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் தொடரும் நிலையில் அத்தொகுதி மேம்பாட்டு பணியில் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் எஸ்.ஜி.சுப்பிரமணியம், கடந்த 2016–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக இத்தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் நெருக்கம் காட்டிய இவர் காலப்போக்கில் தினகரன் அணிக்கு மாறினார். அதன் காரணமாக நடைபெற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் இவரும் இடம்பெற்றார்.

இவரது தகுதி நீக்கம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை தொடர்கிறது. இப்பிரச்சினை தொடர்பாக ஐகோர்ட்டு 3–வது நீதிபதியின் தீர்ப்பினை ஆட்சேபித்து மேல்முறையீடு செய்ய எஸ்.ஜி.சுப்பிரமணியம் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் முடிவு செய்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்யப்படும் நிலையில் எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் சுப்ரீம்கோர்ட்டு இறுதி முடிவு வரும்வரை தொடருவதற்கு வாய்ப்புள்ளது.

இந்தநிலையில் சாத்தூர் தொகுதி மக்களுக்கு தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.விடம் தங்கள் கோரிக்கைகளை தெரிவிப்பதற்கு வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது. உள்ளாட்சி தேர்தல் நடந்து 2 வருடங்கள் ஆன நிலையில் அடிப்படை அமைப்பான பஞ்சாயத்தில் இருந்து நகராட்சி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் சாத்தூர் தொகுதி மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கு யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் தவிக்கும் நிலை உள்ளது. அதிலும் குறிப்பாக கிராமங்களில் அடிப்படை பிரச்சினைகள் பிரதானமாக இருந்து வரும் நிலையில் கிராம மக்கள் அந்த பிரச்சினைகளுக்கு பரிகாரம் தேட உரிய அதிகாரிகளிடம் முறையிட முடியாமல் தவித்து வருகிறார்கள். பஞ்சாயத்து செயலர்களோ அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நிதி ஆதாரம் இல்லை என கைவிரிக்கும் நிலையே இருந்து வருகிறது.

இந்தநிலையில் குடிநீர், கழிப்பறை, சாலை வசதி உள்பட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கோரி அத்தொகுதியில் உள்ள கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வருகின்றனர். ஆனாலும் அவர்களது மனுக்கள் மீது அவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படாத நிலையே நீடிக்கிறது.

ஏனெனில் அவர்களால் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் பாராமுகமாகவே உள்ளனர்.

இத்தொகுதியில் தொகுதி மேம்பாட்டு பணிகளை செய்வதற்கு என ஒவ்வொரு நிதி ஆண்டும் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் காரணமாக கடந்த நிதி ஆண்டும், நடப்பு நிதி ஆண்டும் தொகுதி மேம்பாட்டு நிதி முடக்கம் அடைந்துள்ள நிலையில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சாத்தூர் தொகுதியில் மக்களின் தேவைக்கு ஏற்ப மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும், கிராம மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ஒரு தொகுதியில் மேம்பாட்டு பணிகளை நிறைவேற்றுவதில் பின்னடைவு ஏற்பட்டால் அடுத்த 3 ஆண்டுக்குள் விருதுநகர் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக உருவாவதில் தாமதம் ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் சாத்தூர் தொகுதிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமை வழங்க வேண்டியது அவசியம் ஆகும்.


Next Story