விருதுநகர் ரெயில் நிலையத்தில் 4–வது நடைமேடை சீரமைக்கும் பணி முடக்கம்
விருதுநகர் ரெயில் நிலையத்தில் 4–வது நடைமேடை சீரமைக்கும் பணியை முழுமையாக முடிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில் பாதையில் ரெயில்கள் பயன்பாட்டில் விருதுநகர் ரெயில் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. தொலைதூரங்களில் இருந்து அதிக எக்ஸ்பிரஸ் ரெயில்களும், பயணிகள் ரெயிலும் இந்த வழியாகத்தான் தென்மாவட்டங்களுக்கும், விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு பகுதிக்கும் செல்கின்றன.
இந்த ரெயில்நிலைய மேம்பாட்டு பணி நடைபெற்றபோது ரெயில் நிலையத்தில் 4–வது நடைமேடை அமைக்கப்பட்டது. இந்த நடைமேடை அமைப்பு பணி முழுமையாக முடிவடையாமல் பாதியில் முடக்கம் அடைந்துள்ளது.
தற்போது அருப்புக்கோட்டை அகல ரெயில்பாதை வழியாக செல்லும் மானாமதுரை பயணிகள் ரெயில் 4–வது நடைமேடையில் இருந்து தான் புறப்பட்டு செல்கிறது. மேலும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் 4–வது நடைமேடைக்கு தான் வந்து செல்கின்றன. 4–வது நடைமேடைக்கு மேற்கூரை அமைக்கப்படாததால் ரெயில் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் 4–வது நடை மேம்பாலம் முழுமையாக முடிக்கப்படாததால் ரெயில்நிலையத்தின் கிழக்கு பகுதியில் இருந்து வரும் மக்கள் நடைமேம்பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. உயர் அதிகாரிகள் பலமுறை ரெயில்நிலையத்தில் ஆய்வு செய்த போதிலும் இந்த 4–வது நடைமேடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்கிறது.
எனவே பயணிகள் நலன் கருதி விருதுநகர் ரெயில் நிலைய 4–வது நடைமேடையை சீரமைக்க ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் 1 லட்சம் இரும்பு இருக்கைகள் அமைக்கப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில் விருதுநகர் ரெயில் நிலையத்தில் கூடுதல் இருக்கைகள் அமைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.