மணவாளக்குறிச்சி அருகே டெம்போ - மோட்டார் சைக்கிள் மோதல்; காவலாளி பலி


மணவாளக்குறிச்சி அருகே டெம்போ - மோட்டார் சைக்கிள் மோதல்; காவலாளி பலி
x
தினத்தந்தி 31 Oct 2018 4:25 AM IST (Updated: 31 Oct 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

மணவாளக்குறிச்சி அருகே டெம்போ- மோட்டார் சைக்கிள் மோதியதில் காவலாளி பரிதாபமாக இறந்தார்.

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே உள்ள தெற்கு கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஆதிலிங்கம் (வயது 65). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது, தனது உறவுக்கார பெண்ணை பஸ் ஏற்றி விடுவதற்காக, அவரை அழைத்துக்கொண்டு பஸ் நிலையம் நோக்கி சென்றார்.

வெள்ளமோடி பகுதியில் சென்ற போது அங்குள்ள பெட்ரோல் நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு வெளியே வந்தார். அப்போது, அந்த வழியாக மீன் ஏற்றி வந்த டெம்போ எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் ஆதிலிங்கமும், பின்னால் அமர்ந்திருந்த பெண்ணும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஆதிலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போ டிரைவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ராஜு (53) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story