கோவிலுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு - ஐகோர்ட்டில் அரசு தகவல்
கோவிலுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது என்று ஐகோர்டில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை,
சென்னையை சேர்ந்தவர் ஏ.ராதாகிருஷ்ணன். திருத்தொண்டர்கள் சபை நிறுவனரான இவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
கரூர் மாவட்டம், வெண்ணைமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் கத்தப்பாறை, ஆத்தூர் கிராமத்தில் ஏராளமாக உள்ளன. இந்த நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் கோவிலுக்கு போதுமான வருமானம் இல்லை. எனவே, கோவில் நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது ஆக்கிரமிப்புகளை அகற்றி சம்பந்தப்பட்ட நிலங்களை கோவில் வசம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கோவில் நிலங்களை மீட்பது குறித்து அரசு சார்பில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் 113 நிலங்களில் ஆக்கிரமிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதில், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 73 ஏக்கர் நிலம் 90 பேரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் பட்டாவை கோவில் பெயருக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட விசாரணை நடந்து வருகிறது. தொடர் நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது.
இதையடுத்து, மனு மீதான விசாரணையை தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.