நுண்ணீர் பாசனத்துடன் கூடுதல் நீர் மேலாண்மை பணிகளுக்கு அரசு மானியம் - கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்


நுண்ணீர் பாசனத்துடன் கூடுதல் நீர் மேலாண்மை பணிகளுக்கு அரசு மானியம் - கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்
x
தினத்தந்தி 31 Oct 2018 4:35 AM IST (Updated: 31 Oct 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

நுண்ணீர் பாசனத்துடன் கூடுதல் நீர் மேலாண்மை பணிகளுக்கு அரசு மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்,

விவசாயிகள் முன்னேற்றத்திற்காகவும், வேளாண்மை உற்பத்தியை பெருக்கவும், மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை இருமடங்கு பெருக்கவும், குறைந்த நீரில் அதிக மகசூலை பெருக்கவும் பிரதம மந்திரி நீர்பாசனத்திட்டம் துளி நீரில் அதிக பயிர் என்ற குறிக்கோளுடன் ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் நோக்குடன் நுண்ணீர் பாசனம் அமைக்க ஏதுவாக குழாய் கிணறு அல்லது துளை கிணறு அமைத்தல், ஆயில் என்ஜின் அல்லது மின் மோட்டார் வழங்குதல், நீர்பாசன குழாய் அமைத்தல் மற்றும் நிலத்தடி நீர் சேமிக்கும் தொட்டி அமைத்தல் ஆகிய பணிகள் ரூ.78 லட்சம் மானியத்துடன் செயல்படுத்தப்பட உள்ளன.

குழாய் கிணறு அல்லது துளைகிணறு அமைத்து தரும் பணி ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பான நிலத்தடி நீர் மட்டம் கொண்ட குறுவட்டங்களான அபிராமம், கமுதி, கோவிலாங்குளம், பெருநாழி, காக்கூர், கீழத்தூவல், மேலக்கொடுமலூர், முதுகுளத்தூர், தேரிருவேலி, போகலூர், கிளியூர், மஞ்சூர், நயினார்கோவில், பரமக்குடி, பார்த்திபனூர், தேவிப்பட்டினம், மண்டபம், பெருங்குளம், ராமநாதபுரம், திருஉத்திரகோசமங்கை, ராமேஸ்வரம், ஆனந்தூர், ஆ£.எஸ்.மங்கலம், சோழந்தூர், திருவாடானை, தொண்டி, மங்கலக்குடி, மற்றும் புல்லூர் ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இப்பணிக்கு குழாய் கிணறு அல்லது துளை கிணறு நிறுவுவதற்கு செலவிடப்படும் மொத்த செலவு தொகையில் 50 சதவீதம் மானியமாக பெறலாம்.

ஆயில் என்ஜின் அல்லது மின்மோட்டார் வழங்கும் பணியில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தங்கள் விளைநிலங்களில் குழாய் கிணறு அல்லது துளைகிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மொத்த செலவு தொகையில் 50 சதவீதம் மானியமாக பெறலாம். நீர்பாசன குழாய் அமைத்தல் பணி மாவட்டத்தின் அனைத்து பாசன விவசாய பகுதிகளிலும் நுண்ணீர் பாசனத்துடன் நிறுவப்படுவதற்கான செலவில் 50 சதவீதம் மானியமாக பெறலாம். இதேபோல நீர்சேமிக்கும் தொட்டி அமைத்தல் பணி மாவட்டத்தின் அனைத்து பாசன விவசாய பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும். நீர்சேமிக்கும் தொட்டி அமைத்தல் செலவில் 50 சதவீதம் மானியமாக பெறலாம்.

குழாய்கிணறு அல்லது துளைகிணறு அமைத்தல், ஆயில் என்ஜின் அல்லது மின்மோட்டார் வழங்குதல், நீர்பாசனக்குழாய் அமைத்தல் மற்றும் நீர்சேமிக்கும் தொட்டி அமைத்தல் ஆகிய பணிகளை பெற விரும்பும் பயனாளிகள் தங்கள் விவசாய நிலத்தில் சொட்டுநீர் பாசனம் அல்லது தெளிப்பு நீர் பாசனம் அல்லது மழைதூவான் ஆகிய அமைப்புகளில் ஏதேனும் ஒன்றை நிறுவி இருக்கவேண்டும்.

மானியம் பெற விரும்பும் சிறு, குறு, பெரிய விவசாயிகள் இதன் மூலம் உதவி பெறலாம். நுண்ணீர் பாசன திட்டத்தில் பயன்பெறும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் மானியம் பெறலாம். கூடுதல் நீர் மேலாண்மை பணிகளில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் அணி உறுப்பினர், வேளாண்மை உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர், வேளாண்மை துணை இயக்குனர் ஆகியோரை தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.


Next Story