சபரிமலையை பாதுகாக்க வலியுறுத்தி பா.ஜனதா கட்சியினர் பேரணி


சபரிமலையை பாதுகாக்க வலியுறுத்தி பா.ஜனதா கட்சியினர் பேரணி
x
தினத்தந்தி 31 Oct 2018 4:38 AM IST (Updated: 31 Oct 2018 4:38 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலையை பாதுகாக்க வலியுறுத்தி பா.ஜனதா கட்சியினர் பேரணி நடத்தினர்.

நாகர்கோவில்,

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதற்கு நாடு முழுவதும் அய்யப்ப பக்தர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரளாவிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்களும், அய்யப்ப சேவா அமைப்பு, இந்து இயக்கங்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் குமரி மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று “சபரிமலையை பாதுகாப்போம்“ என்று உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும், ஆர்ப்பாட்டமும், பேரணியும் நடைபெற்றது.

அதன்படி நாகர்கோவில் அண்ணா சிலை அருகில் இருந்து பா.ஜனதா கட்சியினர் பங்கேற்ற பேரணி தொடங்கியது. நகர தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி, நகரசபை முன்னாள் தலைவர் மீனாதேவ், மாவட்ட பார்வையாளர் தேவ், உமாரதி ராஜன், அஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியின்போது அலங்கரிக்கப்பட்ட அய்யப்பன் போட்டோவை கையில் பிடித்தபடி, கட்சி கொடியுடன் அய்யப்பனின் சரணகோஷங்களை முழங்கியவாறு நடந்து வந்தனர்.

அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணி அண்ணா விளையாட்டரங்கம், தலைமை தபால் நிலையம் சந்திப்பு வழியாக நாகராஜா திடலை வந்தடைந்தது. அங்கு சபரிமலையை பாதுகாப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஆண்களும், பெண்களுமாக ஏராளமானோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதேபோல் நேற்று மாலையில் மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட பகுதிகளில் பா.ஜனதா கட்சியினர் சபரிமலையை பாதுகாப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேரணி, சரணகோஷ முழக்க ஆர்ப்பாட்டம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளை நடத்தினர்.


Next Story