கொடுவாய் பகுதியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
பொங்கலூர் அருகே உள்ள கொடுவாய் சுற்றுவட்டார பகுதியில் மின்தடையை கண்டித்து திருப்பூர்–தாராபுரம் சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொங்கலூர்,
பொங்கலூர் அருகே உள்ள கொடுவாய் சுற்று வட்டார பகுதிகளான தாயம்பாளையம், கொசவம்பாளையம், செம்மாண்டகவுண்டம்பாளையம் உள்பட சுமார் 20 கிராம பகுதிகளுக்கு எல்லப்பாளையம்புதூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் இந்த பகுதியில் திடீரென மின்சாரம் தடைபட்டது. மேலும் மாலை மற்றும் இரவு முழுவதும் மின்சாரம் வரவில்லை.
இதனால் இந்த பகுதியில் குடிநீர் மற்றும் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மதியம் கொடுவாய் கடை வீதி மற்றும் அதை ஒட்டியுள்ள நகர்களில் மின்சாரம் தடைபட்டது. மாலை சுமார் 6 மணி வரை மின்சாரம் வரவில்லை. தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு மின்சாரம் இன்றி பெரும் சிரம் ஏற்பட்டது.
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது சரியான பதில் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் திருப்பூர்–தாராபுரம் சாலையில் கொடுவாய் அரசு ஆரம்ப சுகாதார வளாகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் அப்படியே நின்றது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் மின்சார வாரிய அதிகாரி கோபால்(டிவிசனல் என்ஜினீயர்) பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இன்னும் சிறிது நேரத்தில் மின் வினியோகம் வழங்கப்படும், மின் வினியோகம் கொடுத்த பின்னர்தான் நான் இங்கிருந்து செல்வேன் என்று உறுதியளித்தார். அதன்படியே சுமார் அரை மணி நேரத்தில் மின் வினியோகம் வழங்கப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் சாலை மறியல் போராட்டத்தால் திருப்பூர்–தாராபுரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.