நாகர்கோவிலில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக மறியல் - 177 பேர் கைது


நாகர்கோவிலில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக மறியல் - 177 பேர் கைது
x
தினத்தந்தி 30 Oct 2018 11:19 PM GMT (Updated: 30 Oct 2018 11:19 PM GMT)

நாகர்கோவிலில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக நடத்திய மறியல் போராட்டத்தில் 177 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில்,

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதிய விதிகளின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை விதிகளின்படி பணிக்கொடை வழங்க வேண்டும், தகுதி உள்ள அமைப்பாளர்களை அரசின் பிறதுறை காலிப்பணியிடங்களில் நிரப்ப வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க குமரி மாவட்டக்கிளை சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2-வது நாளாக நேற்றும் கலெக்டர் அலுவலகம் முன் சாலைமறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் வில்பிரட் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது சத்துணவு ஊழியர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். மொத்தம் 5 ஆண்கள் உள்பட 177 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரையும் போலீஸ் வாகனங்களில் ஏற்றி ராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தால் பள்ளிகளில் சத்துணவு தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டது.


Next Story