ஆந்திராவில் இருந்து கோவைக்கு கடத்தி வந்து மாணவர்களுக்கு கஞ்சா விற்ற மேலும் 5 பேர் கைது


ஆந்திராவில் இருந்து கோவைக்கு கடத்தி வந்து மாணவர்களுக்கு கஞ்சா விற்ற மேலும் 5 பேர் கைது
x
தினத்தந்தி 31 Oct 2018 3:00 AM IST (Updated: 31 Oct 2018 5:13 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து கோவைக்கு கடத்தி வந்து மாணவர்களுக்கு கஞ்சா விற்ற மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை, 

கோவை பீளமேடு, கொடிசியா பகுதியில் போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ் மேற்பார்வையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியபோது கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதனை கடத்தி வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரி (வயது 43), சக்திவேல் (49) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 110 கிலோ மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான ஈஸ்வரி, சக்திவேல் மீது மதுரையில் கஞ்சா வழக்குகள் உள்ளன. இவர்கள் சமீப காலமாக ஆந்திராவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சா மூட்டைகளை வாங்கி கோவைக்கு காரில் கடத்தி வந்துள்ளனர். மேலும், அந்த கஞ்சாவை கோவையில் புரோக்கர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்ததாக வாக்குமூலம் அளித்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் இவர்களிடம் கஞ்சா மூட்டைகளை வாங்கிய புரோக்கர்கள் பற்றிய விவரங்கள் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புரோக்கர்களான கோவை சிங்காநல்லூரை சேர்ந்த முகமது ரபிக் (23), கோகுல் கண்ணன் (23), ஆவாரம்பாளையத்தை சேர்ந்த தினேஷ் பாபு (24), பிரவீன் (24), கார் டிரைவர் அசோக் (31) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் கஞ்சாவை வாங்கி சிறிய பொட்டலங்களாக பிரித்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். இவர்களிடம் இருந்து கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மொபட், செல்போன், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.25 லட்சமாகும்.

இந்த கும்பலுடன் தொடர்பில் இருந்த முத்துலட்சுமி, மற்றொரு சக்திவேல், முஜிபுர் ரகுமான் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கஞ்சா கடத்தல் வழக்கில் 7 பேரை கைது செய்த போலீஸ் அதிகாரிகளை, போலீஸ் கமிஷனர் சுமித்சரண் பாராட்டினார்.


Next Story