எளிமையான வாழ்க்கை முறை ஊழலுக்கு வழி வகுக்காது - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு


எளிமையான வாழ்க்கை முறை ஊழலுக்கு வழி வகுக்காது - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
x
தினத்தந்தி 31 Oct 2018 3:30 AM IST (Updated: 31 Oct 2018 5:38 AM IST)
t-max-icont-min-icon

எளிமையான வாழ்க்கை முறை ஊழலுக்கு வழிவகுக்காது என்று கோவை விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

கோவை,

சுதந்திர போராட்டத்துக்கு பாடுபட்ட தேச தலைவர்கள் குறித்து ‘சுதந்திர போராட்ட சிற்பிகள்’ என்ற புத்தகத்தை, கோவையை சேர்ந்த தேசபக்தர் பேரவை அமைப்பின் தலைவரும், வக்கீலுமான வி.நந்தகுமார் ஆங்கிலத்தில் எழுதி உள்ளார்.
இந்த புத்தக வெளியீட்டு விழா கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் குறித்து சிறப்பாக இந்த புத்தகத்தில் எழுதப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த குறிப்பாக கொங்குநாட்டை சேர்ந்த திருப்பூர் குமரன், தீரன்சின்னமலை, அவினாசிலிங்கம் செட்டியார், கோவை சிறையில் செக்கிழுத்த கப்பலோட்டிய தமிழன் உள்பட பல தலைவர் கள் சுதந்திர போராட்டத்துக்கு ஆற்றிய சேவைகளை, இன்றைய இளைய தலைமுறையினர் எளிதாக அறியும் வகையில் உள்ளது.

இந்திய சுதந்திர போராட்டத்துக்கு தமிழகம் தியாகிகளை உருவாக்கி கொடுப்பதில் முன்னணியில் இருந்துள்ளது. வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், காமராஜர், கக்கன் போன்ற ஏராளமான தலைவர்கள் இந்தியாவின் சுதந்திரத்துக்காக எண்ணற்ற தியாகங்களை புரிந்துள்ளனர்.
பல்வேறு மதம், மொழி, இனம் என்று இருந்தாலும் நாம் வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்கிறோம். ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் கடவுள்களை வணங்குகிறார்கள். திருக்குறள் உள்ளிட்ட எல்லா அறநூல்களும் நன்மை செய்யவும், ஒழுக்கத்துடன் வாழவும் போதிக்கிறது. உலக வரலாற்றில் நமது நாட்டுக்கு என்று தனி பாரம்பரியம், பண்பாடு உள்ளது.

125 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் மனிதவளம் நிறைந்து கிடக்கிறது. மாணவர்கள் உள்பட அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் சமுதாயத்துக்காக வாழ வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்கள் என்ன கனவு கண்டார்களோ அதை அடைய மாணவ-மாணவிகள் தங்களை தயார்படுத்திக்கொண்டு நாட்டுக்காக சேவையாற்ற வேண்டும்.

ஊழலை அடியோடு கிள்ளி எறிய வேண்டுமானால், ஒவ்வொருவரும் எளிமையான வாழ்க்கை முறை யை தேர்ந்தெடுக்க வேண்டும். எளிமையான வாழ்க்கையை வாழ்வதன் மூலம் காந்தியின் கனவை நிறைவேற்ற முடியும். மாணவ-மாணவிகள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும். போட்டி நிறைந்த இந்த உலகில் தங்களது திறமைகளை வளர்த்து முன்னேற வேண்டும். மாணவ பருவத்தில் ஒருபோட்டியில் 5-வது இடம் பெற்ற எர்னஸ்ட் ஹம்மிங்வே பிற்காலத்தில் கடுமையாக உழைத்து நோபல் பரிசு பெற்றார். எனவே ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் சாதனை படைக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார். புத்தக ஆசிரியர் வி.நந்தகுமார் நன்றி கூறினார்.

விழாவில் இந்துஸ்தான் கல்வி குழும அறக்கட்டளை நிர்வாகி சரஸ்வதி கண்ணையன், அரிமா சங்க சர்வதேச முன்னாள் தலைவர் ராமசாமி, அரிமா சங்க மாவட்ட கவர்னர் ஆறுமுகம், முன்னாள் கவர்னர்கள் எம்.வின்சென்ட் வேதராஜ், மாவட்ட கவர்னர் ஜான்பீட்டர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story