உடுமலை அருகே இருசக்கர வாகனங்கள் மீது பனியன் நிறுவன பஸ் மோதல்; 3 பேர் பலி


உடுமலை அருகே இருசக்கர வாகனங்கள் மீது பனியன் நிறுவன பஸ் மோதல்; 3 பேர் பலி
x
தினத்தந்தி 31 Oct 2018 5:15 AM IST (Updated: 31 Oct 2018 5:46 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே இருசக்கர வாகனங்கள் மீது பனியன் நிறுவன பஸ் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடுமலை,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகில் உள்ள ராமேகவுண்டன்புதூரை சேர்ந்தவர்கள் எஸ்.குமரேசன் (வயது 32) மற்றும் ஆ.குமரேசன்(20). அதே போல் குறிச்சிக்கோட்டையை சேர்ந்தவர்கள் சின்னமாறன் (50), ரவிக்குமார் (32) மற்றும் பெரியசாமி (32). இவர்கள் அனைவரும் தேங்காய் நார் உறிக்கும் தொழிலாளர்கள். இவர்கள் தென்னந்தோப்புகளுக்கு சென்று தேங்காய்நார் உறிப்பது வழக்கம்.

இந்த நிலையில் இவர்கள் 5 பேரும் நேற்று குறிச்சிக்கோட்டையில் இருந்து 3 இரு சக்கர வாகனங்களில் தென்னந்தோப்புகளுக்கு சென்றனர். ரமேகவுண்டன்புதூரை சேர்ந்த ஆ.குமரேசன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் எஸ்.குமரேசன் அமர்ந்து இருந்தார். அதுபோல் பெரியசாமி ஓட்டிச்சென்ற மொபட்டின் பின் இருக்கையில் சின்னமாறன் அமர்ந்து இருந்தார். ரவிக்குமார் மட்டும் தனியாக ஒரு மொபட்டில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் உடுமலை அருகில் உள்ள போடிபட்டி அண்ணாநகர் தளி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அண்ணாநகர் வி.ஜி.ராவ் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் வலது புறம் திரும்பி செல்ல திருப்பியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு பின்னால் அமராவதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உடுமலை, போடிபட்டியில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அந்த பஸ் வேகமாக வந்து கொண்டிருந்ததாகவும், அந்த பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் மீதும் அடுத்தடுத்து மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே எஸ்.குமரேசனும், ரவிக்குமாரும் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த சின்னமாறன், ஆ.குமரேசன் மற்றும் பெரியசாமி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சின்னமாறனுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே சின்னமாறன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து பலியான எஸ்.குமரேசன், ரவிக்குமார் மற்றும் சின்னமாறன் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அதுவரை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்றும், விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் உடுமலை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டனர்.

பின்னர் மாலை 3.30 மணிக்கு அங்கு வந்த சி.மகேந்திரன் எம்.பி., விபத்தில் பலியானவர்களின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இந்த விபத்து தொடர்பாக தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு)வேலுமணி, தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (உடுமலை பொறுப்பு) சிவக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ஆ.குமரேசன் மற்றும் பெரியசாமிக்கு உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக விபத்து நடந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விபத்து நடந்த இடத்தில் திரண்டனர். பின்னர் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் அமராவதிநகர் சக்திநகரை சேர்ந்த சின்னச்சாமி (42) என்பவரை தாக்கினார்கள். பின்னர் பஸ்சின் கண்ணாடியை உடைத்தனர். இதில் காயம் அடைந்த சின்னச்சாமி உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பனியன் நிறுவன பஸ் அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story