போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் - கவர்னர் கிரண்பெடி உத்தரவு


போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் - கவர்னர் கிரண்பெடி உத்தரவு
x
தினத்தந்தி 31 Oct 2018 12:30 AM GMT (Updated: 31 Oct 2018 12:28 AM GMT)

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதியுங்கள் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை போக்குவரத்து துறையால் குறுகிய காலங்களில் சாலை போக்குவரத்தை கையாளுவது குறித்த புதிய கட்டுப்பாடு மற்றும் அதனை எவ்வாறு போக்குவரத்து காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறையினரால் சிறப்பாக செயல்படுத்துவது என்ற தலைப்பில் ஒருநாள் பயிலரங்கு செண்பகா ஓட்டலில் நேற்று நடந்தது. போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு பயிலரங்கினை தொடங்கிவைத்தார். மேலும் சாலைப்போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பான புதிய விதிகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார்.

அப்போது கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:–

போக்குவரத்தை கையாளுவதில் போலீசார், பொதுப்பணித்துறையினர், பொதுமக்கள் என அனைவரது ஒருங்கிணைப்பும் தேவை. அரசு ஊழியர்கள் மக்களுக்கு பணி செய்யத்தான் உள்ளோம்.

புதுவையில் நான் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றுகிறேன். ஆனால் போக்குவரத்தை முறையாக கையாளுவதில் நான் தோற்றுவிட்டேன். அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதியுங்கள். அந்த பணம் பாக்கெட்டில் போடுவதற்கு அல்ல. புதுவையை பொறுத்தவரை ஹெல்மெட் அணிவதற்கான சட்டம் நடைமுறையில் உள்ளது. அதை தடுப்பது யார்? ஹெல்மெட் போடாவிட்டால் அபராதம் விதியுங்கள்.

சிறிய நகராமான புதுச்சேரி ஒரு மாதிரி நகரமாக மாற வேண்டும். விபத்து என்றால் போலீசார் அதை முழுமையாக விசாரித்து பதிவு செய்யவேண்டும். குறிப்பாக குடிபோதையினால் வாகனம் ஓட்டியது, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் செல்வது போன்ற விவரங்களை குறிப்பிடுங்கள். ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்து ஏற்பட்டால் இழப்பீட்டில் 20 சதவீதம் குறைக்கப்படும் என்று என்னிடம் நீதிபதி ஒருவர் தெரிவித்தார்.

நான் கோவாவில் பணியாற்றியபோது அந்த மாநில முதல்–அமைச்சர், தலைமை செயலாளரின் கார்கள் விதிமுறைகளை மீறி நிறுத்தியபோது அதற்கு நோட்டீசு கொடுத்தேன். எனவே காவல்துறையினர் விதிமுறைகளை கடைபிடிக்கும் வி‌ஷயத்தில் பயப்படக்கூடாது.

டெல்லியை பொறுத்தவரை ஒவ்வொரு பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்களும் போக்குவரத்து வார்டன்களாக செயல்படுகின்றனர். மாணவ, மாணவிகள் ரோட்டை கடக்கும்போது அவர் வாகனங்களை நிறுத்தம் பலகையுடன் ரோட்டில் நின்று போக்குவரத்து நிறுத்துகிறார்கள்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி பேசினார்.


Next Story