வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்த வழக்கில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு ஒரு ஆண்டு சிறை


வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்த வழக்கில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு ஒரு ஆண்டு சிறை
x
தினத்தந்தி 31 Oct 2018 1:15 AM GMT (Updated: 31 Oct 2018 12:36 AM GMT)

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் புதுவை என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த், அவரது தந்தை ஆனந்தன் ஆகிய 2 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுச்சேரி,

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த். இவரது தந்தை ஆனந்தன். இவர் கடந்த 2006–2007–ம் ஆண்டு காலகட்டத்தில் புதுச்சேரி மாநில பொது பணித்துறையின் தலைமை பொறியாளராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ.க்கு புகார் சென்றது.

இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் புதுவை வந்து அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ஆனந்தன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. ஆனந்தன், அவரது மனைவி விஜயலட்சுமி, அவர்களது மகன் அசோக் ஆனந்த் ஆகிய 3 பேரும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.3 கோடியே 15 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை புதுச்சேரி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த ஆனந்தன் மனைவி விஜயலட்சுமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார்.

இதனை தொடர்ந்து மீதியுள்ள 2 பேர் மீதும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

புதுச்சேரி தலைமை நீதிபதி தனபால் இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். குற்றம்சாட்டப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த், அவரது தந்தை ஆனந்தன் ஆகிய 2 பேரும் குற்றவாளிகள். அவர்களுக்கான தண்டனை மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று ஒத்திவைத்தார். இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கோர்ட்டின் உள்ளேயே அமர வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து 4.30 மணிக்கு மீண்டும் கோர்ட்டு கூடியது. அப்போது தலைமை நீதிபதி தனபால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ. அவரது தந்தை ஆனந்தன் ஆகிய 2 பேருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்டத்தவறினால் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 57 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

சொத்து குவிப்பு வழக்கில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story