ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 10 மணிநேரம் கிடந்த பெண் சடலம்


ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 10 மணிநேரம் கிடந்த பெண் சடலம்
x
தினத்தந்தி 31 Oct 2018 1:00 AM GMT (Updated: 31 Oct 2018 12:36 AM GMT)

மூச்சு திணறி இறந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுவைக்கு கொண்டு வர ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 10 மணி நேரமாக அந்த பெண்ணின் சடலம் கிடந்ததது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருக்கனூர்,

சென்னை கிழக்கு தாம்பரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள். சலவை தொழிலாளி. இவருடைய மனைவி வாசுகி (வயது 45). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுவை மாநிலம் திருக்கனூர் வணிகர் வீதியில் வசிக்கும் தனது தாய் காளியம்மாளை பார்க்க வந்தார். நேற்று முன்தினம் இரவு வாசுகி சாப்பிட்டு விட்டு தாயார் அருகில் தூங்கிக்கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென்று வாசுகிக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. உடனே அவர் தட்டு தடுமாறி தனது தாயை எழுப்பினார். பின்னர் சிறிது நேரத்தில் வாசுகி மயங்கி விழுந்தார். இதை பார்த்த காளியம்மாள் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து வாசுகியை மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வாசுகி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து திருக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து போலீசார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த வாசுகியின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுவை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முடிவு செய்தனர்.

அப்போது போலீஸ் நிலையத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் பழுதாகி இருந்ததால் போக்குவரத்து போலீஸ் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த வண்டியும் பழுதாகி இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் வாசுகி உடலை புதுவைக்கு கொண்டு வர முடியாமல் திருக்கனூர் போலீசார் தவித்தனர்.

இதனையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆன்புலன்ஸ் வாகனங்களை புதுவைக்கு அழைத்தனர். ஆனால் யாரும் முன்வரவில்லை. இதனால் நள்ளிரவு 12 மணி முதல் காலை 10 மணி வரை வாசுகியின் உடல் மண்ணாடிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ஸ்டெச்சரிலேயே இருந்தது.

இதனையடுத்து வாசுகி உறவினர்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான டி.பி.ஆர்.செல்வத்திடம் நடந்த விவரத்தை தெரிவித்தனர். உடனே அவர் புதுவை கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி எதிரே நிறுத்தப்பட்டு இருந்த தனியார் ஆம்புலன்சை வரவழைத்தார். அந்த வண்டியின் மூலம் வாசுகியின் உடல் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கான அனைத்து செலவையும் டி.பி.ஆர்.செல்வம் ஏற்றுக்கொண்டார்.

அங்கு வாசுகியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இவரது தாய் காளியம்மாள் என்னிடம் பணம் இல்லாததால் வாசுகி உடலை சென்னை கொண்டு செல்ல முடியாது. இதனால் சென்னையில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளேன். இறுதி சடங்கு இங்கேயே நடக்கும் என்று கண்ணீர் மல்க கூறினார்.

இதனையடுத்து வாசுகியின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேற்று மாலை திருக்கனூர் வந்து வாசுகியின் உடலை அடக்கம் செய்தனர்.


Next Story