நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் 3–வது நாளாக சாலை மறியல் 320 பேர் கைது


நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் 3–வது நாளாக சாலை மறியல் 320 பேர் கைது
x
தினத்தந்தி 1 Nov 2018 3:30 AM IST (Updated: 31 Oct 2018 5:22 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் நேற்று 3–வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லை,

நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் நேற்று 3–வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 320 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

3–வது நாளாக...

நெல்லை மாவட்டம் சார்பில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் முன்பு கடந்த 29–ந் தேதி சாலை மறியல் போராட்டம் தொடங்கியது. நேற்று அங்கு 3–வது நாளாக போராட்டம் நீடித்தது. மாவட்ட தலைவர் பிச்சுமணி தலைமை தங்கினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் குமாரவேல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். சமூக நலத்துறை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் துரைசிங், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பு ஆகியோர் பேசினர்.

320 பேர் கைது

பின்னர் மறியல் போராட்டம் நடந்தது. பெரும்பாலான ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர். பெண்கள் கருப்பு சேலை கட்டி இருந்தனர். சத்துணவு ஊழியர்கள் தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. மறியலில் ஈடுபட்ட 320 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் 30 பேர் பெண்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்களை போலீசார் வேனில் ஏற்றி நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பஸ்கள், அந்த வழியாக வந்த கார்கள், ஆட்டோக்கள் அணிவகுத்து நின்றன. அவற்றை போலீசார் ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனர்.


Next Story