தூத்துக்குடி உள்பட 5 இடங்களில் சாலைமறியல்: 747 சத்துணவு ஊழியர்கள் கைது
தூத்துக்குடி உள்பட 5 இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 3–வது நாளாக சாலைமறியலில் ஈடுபட்ட 747 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி உள்பட 5 இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 3–வது நாளாக சாலைமறியலில் ஈடுபட்ட 747 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை மற்றும் உணவு மானியத்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கடந்த 29–ந்தேதி தொடர் சாலைமறியல் போராட்டத்தை தொடங்கினர். நேற்று சத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து, 3–வது நாளாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
நேற்று தூத்துக்குடி–பாளையங்கோட்டை ரோட்டில் சத்துணவு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்துக்கு சங்க ஒன்றிய செயலாளர்கள் லட்சுமண பெருமாள், வைஜெயந்தி மாலா ஆகியோர் தலைமை தாங்கினார். அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி அலுவலர் சங்க சுப்பிரமணியன், தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்க மாநில செயலாளர் முருகன் ஆகியோர் பேசினர். மறியலை அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் பாளையங்கோட்டை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 196 பேரை கைது செய்தனர்.
கயத்தாறு
கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சங்க வட்டார தலைவர் பாலையா, செயலாளர் செல்லத்துரை, பொருளாளர் வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 217 பெண்கள் உள்பட 237 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் முன்பிருந்து சத்துணவு ஊழியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, பகத்சிங் பஸ் நிலையம் முன்பு வந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட துணை தலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலைமறியலில் ஈடுபட்ட 110 பெண்கள் உள்பட 117 பேரை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட துணை தலைவர் ஆனந்தசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலைமறியலில் ஈடுபட்ட 133 பெண்கள் உள்பட 138 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
சாத்தான்குளம்
சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சங்க ஒன்றிய தலைவர் அந்தோணி செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலைமறியலில் ஈடுபட்ட 55 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சுந்தர் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 5 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட 747 பேரை போலீசார் கைது செய்தனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story