ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை: கொலையாளிகளை பிடிக்க தனிப்படை தீவிரம்
சாத்தான்குளத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க 3 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சாத்தான்குளம்,
சாத்தான்குளத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க 3 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
ஓட ஓட விரட்டி கொலை
சாத்தான்குளம் வீர இடக்குடி தெருவைச் சேர்ந்தவர் மூக்காண்டி. லாரி டிரைவர். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவர் பக்கத்து தெருவான பத்திரகாளி அம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவில் அவர் பெற்றோரின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சாத்தான்குளம்–தட்டார்மடம் ரோடு ரஸ்தா தெருவைச் சேர்ந்த மந்திரம் மகன் ஆட்டோ டிரைவரான மற்றொரு மணிகண்டன் (26) உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து, அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே கொலையாளிகள் 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
3 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்ததும், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மற்றொரு மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில், கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கும், கொலையாளி மணிகண்டனுக்கும் இடையே தசரா திருவிழா வரவு–செலவு கணக்கு தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதனால் கொலையாளி மணிகண்டன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்தது தெரிய வந்தது.
3 தனிப்படைகள் அமைப்பு
தலைமறைவான மணிகண்டன் மற்றும் கூட்டாளிகளை பிடிக்க 3 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கு அம்சம்மாள் என்ற மனைவியும், ஜெயஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். அம்சம்மாளுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அவர் மும்பையில் உள்ள பெற்றோரின் வீட்டில் உள்ளார்.
சாத்தான்குளத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story