நாமக்கல்லில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு


நாமக்கல்லில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
x
தினத்தந்தி 1 Nov 2018 4:15 AM IST (Updated: 31 Oct 2018 11:41 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் டெங்கு காய்ச்சலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்எச்சரிக்கை பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல், 
மழைக்காலங்களில் நீரானது வீடுகளின் மேற்பகுதிகளிலும், தேங்காய் சிரட்டை, அம்மிக்கல், தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் ஆகியவற்றில் தேங்குவதாலும், வீடுகளில் குடிநீரை சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்காமல் இருப்பதாலும், டெங்கு கொசுக்கள் நன்னீரில் முட்டையிட்டு உற்பத்தியாகின்றன.

இதை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் நகராட்சி கொசவம்பட்டி, செட்டியார் தெரு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்எச்சரிக்கை பணி மற்றும் சுகாதார பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பாத்திரங்களில் கொசுப்புழுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா? என்று பார்வையிட்டார். மேலும் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களால் ஏற்படும் பாதிப்பு, அவற்றை உருவாகாமல் தடுக்கும் முறைகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது அவர், டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு ரத்த தட்டணுக்கள் குறைவதால் முறையாக சிகிச்சை செய்யாவிட்டால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தட்டணுக்களை பரிசோதிக்கும் எந்திரங்களை வழங்கி உள்ளது.

மேலும் தொடர் சிகிச்சை வழங்குவதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டு வருகின்றது. எனவே காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கோ, அரசு மருத்துவமனைகளுக்கோ சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

பின்னர் கொசவம்பட்டி, செட்டியார்தெரு பகுதியில் குடிநீரில் குளோரின் போதுமான அளவு கலக்கப்பட்டு உள்ளதா? என்றும் பரிசோதனை மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது நாமக்கல் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கமலநாதன், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் கல்விக்கரசன் உள்பட சுகாதார அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story